நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக ஆ.ராசா அறிவிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் வருகை தந்த ஆ.ராசாவுக்கு திமுக மற்றும் இதன் கூட்டணி கட்சினர் இணைந்து வரவேற்பளித்தனர்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே கூடிய திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர், விசிக உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர்கள் மத்தியில் ஆ.ராசா பேசியதாவது: அரசியல் சாசனத்தை காப்பாற்றவில்லை என்றால் இந்தியா உடைந்து போகும். எனவே இந்திய அரசியல் சட்டத்தை காப்பாற்ற மோடி தோற்கடிக்கப்பட வேண்டும்.
ஜார்கண்ட் முதல்வர் மட்டுமல்ல நாட்டின் தலைநகரான டெல்லியின் முதலமைச்சர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ள நிலையில் வடநாட்டு தலைவர்கள் எல்லாம் பயந்து சாகும் நிலையில் மோடியை எதிர்க்க துணிச்சலாக தனியாளாக களமிறங்கியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாமல் இங்கு தேர்தலுக்காக ஐந்து முறை மோடி வந்துள்ளார். இன்னும் ஐந்து முறை வருவார். ஆனால் தமிழ்நாட்டில் எது வும் நடக்காது. இவ்வாறு அவர் பேசினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தொண்டமுத்தூர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அஷ்ரப்அலி, டி.ஆர்.சண்முக சுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாண சுந்தரம், நகர செயலாளர்கள் முகமது யூனுஸ், முனுசாமி, வழக்கறிஞர்கள் சந்தானம், ஷபீக், ரமேஷ், மற்றும் திமுக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.