நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 15.09.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறுவார்கள்.
மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார் களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சிறப் பாக செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற நிர்வாகம், தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்தகுழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண் காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு, இத் திட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி 26 தொடக்கப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2686 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு மொத்தம் 73 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வரை பயிலும் மொத்தம் 7197 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மதுரை மாநகராட்சியின் பள்ளிகளில் மட்டும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் வழங்கும் பணியில் 126 தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு மதுரை மாநகராட்சியின் சார்பில் மாதந்தோறும் ரூ.1500 மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் மதுரை மாநகராட்சி ஆரம்பபள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளியில் சேர்ந்து பயின்று வருகிறார்கள்.
சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி பி.யோகலட்சுமியின் தாயார் துர்கா, தந்தை புவனேஸ்வரன். இத்திட்டத்தின் பயன்பாடு குறித்து துர்கா கூறியதாவது:
எனது இரண்டு குழந்தைகளான பி.யோகலட்சுமி 1 ஆம் வகுப்பும், பி.ஜீவானந்தம் இரண்டாம் வகுப்பும் சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். எனது கணவர் எலெக்டிரிசியனாக வேலை பார்த்து வருகிறார். தினமும் வேலை இருக்காது. நானும் வீட்டு வேலைக்கு செல்கிறேன்.
அதிகாலையிலேயே வேலைக்கு சென்றுவிடுவதால் குழந்தைகளுக்கு காலை உணவு தயார் செய்து தருவதில் சிரமம் இருந்தது. பலநாட்கள் சாலையோர கடைகளில் வாங்கி சாப்பிடுகிற நிலைமைஇருந்தது. அது ஆரோக்கியமான சாப்பாடு இல்லை எனத் தெரிந்தும் எங்கள் குடும்ப சூழல் காரணமாக சில நாட்கள் கடைகளிலும் பல நாட்கள் பிள்ளைகள் சாப்பிடாமலும் பள்ளிக்குச் சென்றனர். ஒரு நாள் எனது மகள் அவளது பள்ளியிலேயே காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளியிலேயே உணவு வழங்கப்படுகிறது என தெரிவித்தாள். அந்த நல்ல செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
இப்பொழுது எனது இரு குழந்தைகளும் பள்ளியிலேயே காலை உணவு சாப்பிடுவதால் நானும் எனது கணவரும் நிம்மதியாக வேலைக்கு செல்கிறோம். காலை உணவு சாப்பிட்டு எனது மகனின் ஊட்டச்சத்து அதிகரித்து மிகுந்து ஆரோக்கியத்துடன் உள்ளான்.
மேலும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான காலை உணவுகள் பள்ளியில் வழங்கப்படுவது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் மட்டுமல்ல என்னை போன்ற வாழ்க்கையில் மிக கஷ்டப்பட்டு வேலைக்கு செல்லும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். தாய் உள்ளதோடு இத்திட்டத்தை ஏற்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் அய்யா அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பாகவும், என்னை போன்று நிம்மதியாக பணிசெய்யும் அனைத்து குடும்பத்தினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சொக்கிகுளம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவன் அபுபக்கர் சித்திக்கின் தாயார் குருஷித் பேகம் அளித்த பேட்டி:
எனது கணவர் முகமது கனி. எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். எனது மூன்று குழந்தைகளான அபுபக்கர் சித்திக் 3ஆம் வகுப்பும், தன்ஜிமா 5ஆம் வகுப்பும், முஸ்பிரா 6ம் வகுப்பும் சொக்கிகுளத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் படித்து வருகி றார்கள். நான் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கின்றேன். குழந்தைகளுக்கு காலை உணவுகள் செய்வதில் சிரமமாக இருந்தது.
பல்வேறு சிரமத்திற்கு இடையில் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டும் கடைகளில் விற்கும் ரெடிமேடு உணவு பாக்கெட்டுகளை வாங்கி தயார் செய்து கொடுத்து வந்தேன். எனக்கும் எனது குழந்தைகளுக்கும் சத்தான, ஊட்டமான உணவுகள் தயார் செய்து கொடுக்க முடியவில்லை என்று தினம் தினம் கவலைப்பட்டு கொண்டு இருந்தோம்.
தற்போது மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் காலை உணவுத்திட்டம் பள்ளியில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். எனக்கும் எனது கணவருக்கும் மிக்க மகிழ்ச்சி. தற்போது எனது குழந்தைகள் முன்பைவிட காலையிலேயே சுறுசுறுப்புடன் எழுந்து தானாகவே பள்ளிக்கு சீக்கிரமாக சென்று வருவது எனக்கே வியப்பாக உள்ளது. இதுபோன்று ஏழை குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு சத்து மிகுந்த உணவுகளை வாரிவழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கும், மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தொடர்ந்து சிறப்பாக காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி கொண்டு இருக்கும் மாண்புமிகு மேயர் அவர்களுக்கும் ஆணையாளர் அவர்களுக்கும் எனது குடும் பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
மதுரை மாவட்டம்.