விழுப்புரத்தில் நேற்று திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இதில் வட சென்னையை சேர்ந்த ஷாம்ஸு முதலிடம் பெற்று 2024ம் ஆண்டுக்கான பட்டத்தை வென்றார்.
இரண்டாம் இடத்தை புதுவை மாநிலம் மணக்குல விநாயகர் மருத்துவ கல்லூரி மாணவி வர்ஷா பெற்றார்.
தொடர்ந்து மூன்றாம் இடத்தை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுகப்பிரியா பெற்றார்.
தொடர்ந்து ஷாம்ஸு கூறுகையில்,”நான் சென்னையில் பெரம்பூர் பகுதியில் வசிக்கிறேன். இங்கு சென்னை திருநங்கை நாயக்கர்கள் நடத்திய அழகி போட்டியல் கலந்து கொள்வதை பெருமை கொள்கிறேன்.
நான் கொரோனா காலகட்டத்தில் பஜ்ஜி கடை போட்டு வாழ்ந்து வந்தேன். தற்போது நான் மாடலிங் துறையில் பணிகள் செய்து வருகிறேன்.
திருநங்கைகளுக்கு போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் செய்வது போன்றவற்றை விட்டுவிடுவார்கள்” என்றார்.
மேலும் வர்ஷா கூறுகையில்,”இந்த நிகழ்ச்சிக்காக நான் பல முயற்சிகள் செய்து அதன் பலன் தற்போது கிடைத்துள்ளது. திருநங்கைகளுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்பதை நான் அரசிடம் கோரிக்கையாக வைக்கிறேன்” என்றார்.