சென்னை நகர மக்களின் மிகவும் பிடித்தமான ஷாப்பிங் தளமாகத் திகழும் பிரபல எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக 20 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள “ஐஸ் வாட்டர், ஸ்போர்ட்ஸ் அரேனா” என்னும் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது.
மக்களுக்கு சிறந்த ஷாப்பிங் மற்றும் பொழுது போக்கு அனுபவங்களை வழங்குவதில் முன்னணி மாலாக எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்ளது. அந்த வரிசையில் தற்போது புதிதாக இந்த விளையாட்டு அரங்கமும் சேர்ந்துள்ளது. அதிநவீன வசதிகள் மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையாக இந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக செஸ் ஒலிம்பியாட் மற்றும் தற்போது நடைபெற்று வரும் கேலோ இந்தியா போட்டி ஆகியவற்றின் மூலம் விளையாட்டுத்துறையில் சென்னை இந்திய அளவில் தன்னை அடையாளப்படுத்தி வருகிறது.
சிறந்த விளையாட்டு நகரமாக மாறி வரும் சென்னை நகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ இந்த தனித்துவமான முன்முயற்சியுடன் இந்த புதிய விளையாட்டு அரங்கை திறந்துள்ளது.
தடகள போட்டிகளுக்கான சிறந்த விளையாட்டு மைதானமாகவும் இது இருக்கும். இங்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய 3 உயர்மட்ட பிங்பாங் விளையாட்டு மைதானங்கள் மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த தரையுடன் கூடிய அதிநவீன 5v5 புட்சல் அரங்கம், பாக்ஸ் கிரிக்கெட் போட்டி களுக்கான மைதானம் என பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.
இங்கு நடைபெறும் விளையாட்டுகளை மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் 100 இருக்கைகள் உள்ளன. எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் சென்ட்ரல் ஏட்ரியத்தில் இதற்கான துவக்க விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யா கலந்து கொண்டு தனது விளையாட்டு திறமையை வெளிப்படுத்தும் வகையில் சில விளையாட்டுகளை விளையாடினார்.
மேலும் “மாஸ்டர் தி பிளாஸ்டர்” என்னும் பாடகர் பிஜோர்ன் சுர்ராவ் இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சர்வதேச நடனத்துடன், ரஷ்ய கார்னிவல் நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சி களும் அனைவரையும் கவர்ந்தது.
ஐஸ் வாட்டர் ஸ்போர்ட்ஸ் அரேனா குறித்து நிர்வாக இயக்குனர் கவிதா சிங்கானியா கூறுகையில், இது ஒரு விளையாட்டு மைதானமாக மட்டுமல்லாமல் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்புக்கு சிறந்த சான்றாகும்.
இந்த அரங்கம் வரும் காலங்களில் சென்னையின் விளையாட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.