fbpx
Homeதலையங்கம்வரவேற்பை பெற்று வரும் ‘நூல் இரவல் திட்டம்’!

வரவேற்பை பெற்று வரும் ‘நூல் இரவல் திட்டம்’!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நூல் இரவல் திட்டம் தொடங்கிய பின்னர் அதிகமானோர் உறுப்பினர்களாக பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலகத்துறை சார்பில் “நூல் இரவல் திட்டம்“ தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் 25க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக புதியதாக பதிவு செய்துவருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வரை 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக புதியதாக பதிவு செய்துள்ளனர் என அண்ணா நூற்றாண்டு நூலகம் சார்பில் தெரிவித்துள்ளனர். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புத்தகங்கள் இரவல் பெறுவதற்கு நூலகத்தில் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும்.

புத்தகங்களை இரவல் பெறுவதற்கான உறுப்பினர் காப்பு தொகை மற்றும் நடப்பாண்டிற்கான ஆண்டு சந்தா செலுத்தி இருக்க வேண்டும். இந்த நூல் இரவல் திட்டமானது பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரிடமும் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

புத்தகங்கள் வெறும் பொழுதுபோக்கு சாதனங்கள் மட்டும் அல்ல, அறிவின் ஊற்றுக் கண்கள்.
ஒரு நல்ல புத்தகம் நாட்டின் தலைவிதியையே மாற்றும். ஒரு நல்ல புத்தகம் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையையே மாற்றி விடும்.

தினமும் ஒரு அரைமணி நேரம் வாசிப்பதற்குச் செலவிடுங்கள். நீங்கள் மட்டும் அல்ல, உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் இந்த நல்ல பழக்கத்தை விதையுங்கள்.

அப்போது தான் செல்போன், யூடியூப் என்ற சாதனங்களுக்கு அடிமையாகிக் கிடக்கிற இளம் சமுதாயத்தை அந்த அடிமைத் தனத்தில் இருந்து நாம் விடுவிக்க முடியும்.
அதற்கு வழிகாட்டுவதாக தமிழ்நாடு அரசின் நூல் இரவல் திட்டம் திகழ்கிறது என்றால் மிகையன்று.

இத்திட்டம் குறித்து மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து வயதினரையும் நூலகத்தில் உறுப்பினராக சேர்த்து அவர்களின் வாசிக்கும் பழக்கத்துக்குள் கொண்டு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறி உள்ளது. இதில் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img