fbpx
Homeபிற செய்திகள்ஆதிவாசி மக்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

ஆதிவாசி மக்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள மலை கிராமங்களில் என்எம்சிடி அறக்கட்டளை மற்றும் அரிமா சங்கங்கள் இணைந்து ஆதிவாசி மக்களுடன் 14ம் ஆண்டாக பொங்கல் விழா கொண்டாடினர்.

கோவை நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளையானது ஏழை, எளிய மற்றும் மலைவாழ் மக்களுக்காக கடந்த 35 ஆண்டுகளாக சமூக மேம்பாட்டுப்பணியை செய்து வருகிறது. அதன் தொடர்சியாக வருடந்தோறும் கோவை ஆனைகட்டி கோபனாரிப் பகுதியில் உள்ள அனைத்து பழங் குடி கிராமங்களையும் அழைத்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த வருடம் ஆனைகட்டி அருகிலுள்ள கோபனாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள நபார்ட் கிராமசந்தை வளாகத்தில் 14வது ஆண்டாக பொங்கல் விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை ஆதிவாசி மக்கள் தங்களது முறைப்படி பூக்கள் மற்றும் மூங்கில் குச்சி கொடுத்து வரவேற்றனர்.

இந்த விழாவிற்கு நிர்வாக அறங்காவலர் ஏ.எஸ்.சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். அரிமா சங்க ஆளுநர் ராம்குமார் முன்னிலை வகித்து பேசினார். இவ்விழாவில் தாட்கோ மாவட்ட மேலாளர் மணி மேகலை, கோவை மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அதன்பின்னர் ஆதிவாசி மக்களுடன் இணைந்து வந்திருந்த கல்லூரி மாணவ மாணவிகள், 21 அரிமா சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள், சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் உள்பட அனைவரும் உற்சாகமாக நடனம் ஆடி அசத்தினர்.

அதன்பின்னர் 46 ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த சுமார் 1000 மலைவாழ் மக்களின் குடும்பங்களுக்கு புத்தாடைகள், லேப்டாப், பரிசல், மலைவாழ் மக்களின் வாத்தியங்கள் என நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டன. இதில் 21 அரிமா சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள், சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆதிவாசி மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழா வின் இறுதியில் கரிகாலன் நன்றி கூறினார்.

மேலும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை செய்திருந்தது.

படிக்க வேண்டும்

spot_img