அனைத்து வயதினருக்கும் காலை உணவு மிகவும் அவசியமானது; அதனைத் தவிர்க்கவே கூடாது என்பது தான் மருத்துவர்களின் அறிவுரை. மதியம், இரவு உண்பதை விட நன்றாக சாப்பிட வேண்டியதும் காலை வேளையில் தான்.
இதனைக் கருத்தில் கொண்டு தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டமாக தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு வெகுசிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும். நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள்.
இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்திருக்கிறது ‘என்றும்’ ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உண்டு வகுப்பறைகளில் சிறப்பாகக் கல்வி பயின்று வருகிறார்கள்.
இத்திட்டத்தின் சிறப்புகளை, தெலங்கானா மாநில அரசு அறிந்து அதன் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்து காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுதல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுதல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டுச் சென்றனர். தற்போது தெலங்கானா மாநிலத்தில் காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழடைந்து வருகின்ற நிலையில், வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கி இருக்கிறது. கனடா நாட்டில் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் நேற்று (2.4.2024) “கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கம் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதனைக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், சமூக வலைதளத்தில் கனடா நாட்டின் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுவதாக செய்தியை பார்த்ததும் மனம் மகிழ்ச்சி அடைந்தேன்
என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், கனடா நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்படுவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பெருமை தேடித் தந்துள்ள திட்டம் என்றால் மிகையாகாது!