fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச மறுசீரமைப்பு தினத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

சர்வதேச மறுசீரமைப்பு தினத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

உலக மார்பக மறுசீரமைப்பு நாள் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை மார்பக மையம் சார்பில் மார்பகப் புற்றுநோயைக் கடந்து வாழ்க்கையை மீட்டெடுத்தல் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வதேச மார்பக மறுசீரமைப்பு தினத்தில் அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மார்பகப் புற்றுநோயை வென்ற 100க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் மார்பக மறுசீரமைப்பு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மார்பக மையத்தின் மூத்த ஆலோசகரும், ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) மற்றும் சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் வெங்கட் ராமகிருஷ்ணன் மற்றும் முதுநிலை மருத்துவ ஆலோசகரும், புற்றுநோய் ஒட்டுறுப்பு (ஆன்கோபிளாஸ்டிக்) மார்பக அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

புற்று நோயிலிருந்து மீண்டவர்கள் தாங்கள் கடந்து வந்த பயணங்களையும், அனுபவங்களையும் நிகழ்வில் பகிர்ந்துகொண்டனர். மார்பகப் புற்றுநோய் மற்றும் மறுசீரமைப்பு சிகிச்சை குறித்த காணொலி விளக்கப் படங்களும் ஒளிபரப்பட்டன.

இந்தியாவில், மார்பகப் புற்றுநோய்க்குள்ளாகும் 40 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் தங்களது மார்பகங்களை மட்டும் இழப்பதில்லை. மாறாக, தன்னம்பிக்கையும், சுய மதிப்பையும் சேர்த்தே இழக்கின்றனர். அந்த இழப்பை இத்தகைய மறு சீரமைப்பு சிகிச்சைகளால் ஈடு செய்ய முடியும் என நிகழ்வில் பேசினர்.

டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா கூறுகையில், “தற்போது உள்ள மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் மற்றும் துல்லியமான பட வழிகாட்டுதல் (இமேஜிங்) ஆகியவை தொடக்கநிலையிலேயே நோயைக் கண்டறிவதை சாத்தியமாக்கியுள்ளன.

இதன் பயனாக பல பெண்களின் ஆயுள் காலம் நீட்டிக்கப்படுகிறது” என்று கூறினார். டாக்டர் வெங்கட் ராமகிருஷ்ணன் பேசுகையில், “மார்பக மறுசீரமைப்பு சிகிச்சை நுட்பங்கள் மகத்தான முன்னேற்றத்தை எட்டியுள்ளன. நோயாளியின் திசுக்களைப் பயன்படுத்தியே மறு சீரமைப்பு செய்ய முடியும்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img