“வாஷிங் மெஷின், வாஷிங் மெஷின்” என்று பா.ஜ.க-வை விமர்சிக்கிறார்கள், எதிர்க்கட்சியினர். ‘ஊழல் வழக்கு, முறைகேடு வழக்கு, மோசடி வழக்கு என எந்த வழக்குகள் இருந்தாலும், பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டால், நீங்கள் புனிதராகிவிடலாம். இதுதான் பா.ஜ.க வாஷிங் மெஷினின் மகிமை’ என்று எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்கிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மேடையிலேயே வாஷிங் மெஷின் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், ‘பா.ஜ.க வாஷிங் மெஷின்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
அமலாக்கத்துறை விசாரணை, வருமான வரிப் பிரச்னைகள் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொண்டுவரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பா.ஜ.க-வில் இணைந்த பிறகு, அவர்கள் மீது விசாரணை முடிவுக்கு வருவதும், வழக்குகள் கைவிடப்படுவதும் சகஜமாகிவிட்டது. இந்த விவகாரத்தைத்தான், பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்துவருகின்றன.
பா.ஜ.க வாஷிங் மெஷினுடன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான பவன் கேரா, ‘பா.ஜ.க வாஷிங் மெஷினின் விலை ரூ.8,500 கோடி (தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க-வுக்கு நன்கொடையாக வந்த நிதி). ஆளும் பா.ஜ.க-வின் முழுமையான தானியங்கி சலவை எந்திரம், பா.ஜ.க-வில் சேருங்கள். வழக்குகள் முடிக்கப்படும் என்ற கொள்கையைக் கொண்டது’ என்றார்.
பலர் மீதான வழக்குகள், பா.ஜ.க-வில் அவர்கள் சேர்ந்த பிறகு கைவிடப்பட்டிருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர்.
அப்போது ஏர் இந்தியா ஊழல் மூலமாக ரூ.30,000 கோடி வரை முறைகேடு செய்து விட்டார் என பிரபுல் படேல் மீது பாஜக குற்றம்சாட்டியது. அவர் மீது 2017-ம் ஆண்டு இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்ட பிறகு, பிரபுல் படேல் பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தார். அதன் பிறகு, பிரபுல் படேலுக்கு எதிரான வழக்குகளில் ஆதாரம் இல்லை என்று சொல்லி வழக்கை முடித்துவைக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்தது.
பிரபுல் படேல் மட்டுமல்ல, பா.ஜ.க-விலும், பா.ஜ.க கூட்டணியிலும் சேர்ந்த பிறகு ‘புனிதர்’களாக மாறியவர்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது என பட்டியலிட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தங்கள் பிரதான பிரசாரமாக இந்த தேர்தலில் முன்னெடுத்து வருகின்றனர்.
ஊழல்களில் ஊறித்திளைத்தவர்களைப் புனிதர்களாக்கும் ‘வாஷிங் மெஷின்’ வேலையை பா.ஜ.க செய்துவருவதாகக் கூறி, அதனை மிகப்பெரிய பிரசாரமாக பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொள்கின்றன.
ஆனால், எந்தளவுக்கு எதிர்க்கட்சியினரின் பாஜக வாஷின் மெஷின்
பிரசாரம் வாக்களர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது? என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும்!