fbpx
Homeதலையங்கம்பின்னடைவைச் சரிகட்டி இலக்கை எட்டுமா பாஜக?

பின்னடைவைச் சரிகட்டி இலக்கை எட்டுமா பாஜக?

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி – தேசிய ஜனநாயகக் கூட்டணி என இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துவோம் என இந்தியா கூட்டணியும் 400 இடங்களை வென்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என தேசிய ஜனநாயக கூட்டணியும் தங்கள் பிரசாரத்தை முன்னெடுத்து களமிறங்கி இருக்கின்றன.

அதேநேரத்தில் பா.ஜ.க கூட்டணியில் சில பிரச்சனைகள் நீடித்து வருகிறது. ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வரும் பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி & காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளனர். இவர்களை வீழ்த்துவதற்காக பா.ஜ.க, அகாலி தளம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இரு கட்சிகளும் பல ஆண்டுகளாக கூட்டணியாக இருந்து வந்தன. 2020 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளால் இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் இந்த விரிசலை பா.ஜ.க ஒட்டவைக்கப்பார்த்தது. ஆனால் முடியவில்லை.

மொத்தம் உள்ள 13 மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க தனித்து போட்டியிடப்போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் சுனில் ஜாகர் அறிவித்துள்ளார். அதாவது சிரோமணி அகாலி தளத்துடன் பாஜக கூட்டணி இல்லை என்பது உறுதியாகி விட்டது.

மேலும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான ஒரு மணி நேரத்தில் மோடி முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரஞ்சன் பட் தான் போட்டியிட போவதில்லை என அறிவித்தார். சபர்காந்தா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிகாஜி தாக்கூரும் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதேபோல், பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பாஜக மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்யதேவ் பச்சௌரி தேர்தலில் போட்டியிட மறுத்து விலகி பரபரப்பை எற்படுத்தி இருக்கிறார். மேற்கு வங்கத்திலும் சில பாஜக வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகி இருக்கிறார்கள்.

அது மட்டுமா? வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து ஆகியவற்றில் போட்டியிடப் போவதில்லை என பாஜக அறிவித்துள்ளது. பாஜக ஆட்சி நடக்கும் மணிப்பூரிலேயே அங்கு அக்கட்சி களம் காணமுடியாமல் விலகி இருக்கிறது. அங்கு பெரிய அளவில் நடந்த கலவரமே அதற்கு காரணம்.

அதேபோல், சில மாநிலங்களில் பாஜகவால் பலமான கூட்டணியை அமைக்க முடியவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா- பாஜக இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது. ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சியுடன் பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்து, அங்கு பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

ஆக, வேட்பாளர்கள் விலகல், கூட்டணி முறிவுகள், போட்டியில் இருந்தே விலகல்… இதையெல்லாம் முன்வைத்து பாஜகவுக்குத் தோல்விபயம் வந்து விட்டது என இந்தியா கூட்டணி கட்சிகள் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. இதெல்லாம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்று தான் அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதனையெல்லாம் சரிகட்டி, `ஜூன் 4 – 400 இடங்களுக்கு மேல்’ என்ற தன் இலக்கை பாஜக எட்டுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img