fbpx
Homeதலையங்கம்பாஜக ஆய்வுக்குழுவும் திமுகவின் கேள்வியும்!

பாஜக ஆய்வுக்குழுவும் திமுகவின் கேள்வியும்!

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கானத்தூர் பகுதியில் உள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வீட்டு முன் சுமார் 45 அடி உயரமுள்ள பா.ஜ.க கட்சியின் கொடிக்கம்பம் ஒன்று முன் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறாகவும், உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மிக அருகில் உயிருக்கு ஆபத்தான வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் சென்னை மாநகராட்சியில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை மாநகராட்சி அதிகாரிகளும் போலீசாரும் அகற்ற சென்றனர். அப்போது, பா.ஜ.க துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் சுமார் 110 பேர் அரசுக்கு எதிராகக் கோஷமிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இவர்களை போலீஸார் பலமுறை எச்சரித்தும் கேளாமல் தொடர்ந்து அரசு அலுவலர்களிடம் தகராறு செய்துகொண்டிருந்தனர். இதனால் போலீஸார் அவர்களைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த ஜேசிபி இயந்திரத்தைக் கற்களைக் கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்து பொது சொத்துக்குச் சேதம் விளைவித்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த கொடிக் கம்பம் அகற்றப்பட்டது.

அரசியலில் இது ஒரு சாதாரண விஷயம். அனுமதியின்றி வைத்த கொடிக்கம்பத்தைத் தான் போலீசார் அகற்றி இருக்கிறார்கள். இது தவறா? அனுமதி பெற்று இன்னொரு இடத்தில் கொடிக்கம்பம் நடலாம்.

இதில் ஆய்வு செய்ய என்ன இருக்கிறது? அதுவும் ஆய்வு செய்ய தேசிய அளவில் பாஜக அமைத்த நான்கு உறுப்பினர் குழு வருகிற 27ம் தேதி தமிழகம் வருகிறது.
வரட்டும், அந்தக்குழு நடுநிலையோடு ஆய்வு செய்யுமா? செய்யாது என்பது வெள்ளிடைமலை.

பாஜகவினருக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது என்பது தான் அந்த குழுவின் அறிக்கையாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. அந்த பாஜக தேசிய ஆய்வுக் குழுவினரைப் பார்த்து தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார்.

சமீபகாலமாக பாஜகவில் இணைந்துள்ள குற்றச் செயல்களில் பெயர் போன ரவுடிகளின் பட்டியலை எடுத்து அவர்கள் குற்றப் பின்னணியை ஆய்வு செய்து மக்கள் மன்றத்தில் பாஜக குழு அறிக்கை சமர்ப்பிக்குமா?` -என்பது தான் அந்த கேள்வி.

சம்மட்டியால் அடித்தாற்போல அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டுள்ள இந்த கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் சொல்வாரா? தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பதில் சொல்வாரா?

மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைதியை சீர்குலைக்கும் வாய்ச்சவடால் மூலம் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டு வருகிறார்.

அரசியலில் அரை வேக்காட்டுத் தனமாக சின்னச்சின்ன பிரச்னையை எல்லாம் ஊதி பெருக்கி பிரச்னையை உருவாக்கி கட்சி நடத்துபவர் தான் அண்ணாமலை என்பது அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால் தான் அதிமுக – பாஜக கூட்டணியே முறிந்தது.

கொடிக்கம்ப விவகாரம் போன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, குழு அமைத்திருப்பது அச்சுறுத்தல் நடவடிக்கையாகும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.

அரசியலில் கொஞ்சமாவது பெருந்தன்மை வேண்டும். யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக இந்த சின்ன விஷயத்திற்காக ஆய்வுக்குழுவை ஜே.பி.நட்டா அனுப்பி வைப்பது தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க உதவாது!

படிக்க வேண்டும்

spot_img