காரமடை வட்டாரத்தில் கிராம வேளாண் வளர்ச்சிக்குழு கூட்டம் பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ் குமார் தலைமையில் தென்பொன்முடி மாரியம்மன் கோவில் திடலில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சுசீந்திரா முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை,கால்நடை,பட்டு வளர்ச்சி, வருவாய்த்துறை,கூட்டுறவு துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு நடப்பாண்டில் செயலாக்கத்தில் உள்ள திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து பேசிய வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் ஹசீனா விவசாயிகளுக்கு அரசு வேளாண் இயந்திரங்களை மானியத்துடன் வழங்கி வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் பேசிய வேளாண்மை துறை உதவி இயக்குநர் பாக்கியலட்சுமி தேசிய வேளாண் வளர்ச்சி (ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் 50 சதவீத மானிய விலையில் ஒரு ஹெக்டேருக்கு 500 மி.லி வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டருக்கு ஒரு லிட்டர் அளவிற்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.இதனை விவசாயிகள் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிக உதவி வேளாண் அலுவலர் ராமகிருஷ்ணன்,தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட ஆலோசகர் மாரியப்பன்,ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ், துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ், பட்டு வளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் பர்ஸானா,அட்மா உதவி தொழில் நுட்ப மேலாளர் தினேஷ் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.கூட்டத்தின் நிறைவாக வேளாண் அலுவலர் சரண்யா நன்றியுரை ஆற்றினார்.