மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
இந்த நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானை,மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து வருவது வாடிக்கையாகி வருகிறது.அப்படி வரும் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய பாகுபலி யானை மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஓடந்துறை ராமசாமி நகர் பகுதியில் ஊருக்குள் நுழைந்துள்ளது. அப்போது,வழியில் இருந்த விநாயகர் கோவிலின் சுற்றுச்சுவரை இடித்துள்ளது.
இதனைக்கண்டு அப்பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு ஒன்று மிரண்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பாகுபலி யானையினை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பாகுபலி யானை ஊருக்குள் நுழைந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த பல மாதங்களாக வனப்பகுதிக்குள் மட்டுமே இருந்து வந்த பாகுபலி யானை கடந்த சில தினங்களாக ஊருக்குள் நுழைந்து வருவது வாடிக்கையாகி உள்ளது.
இதனால் தாங்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம்.எனவே, வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து பாகுபலி யானையினை மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.