fbpx
Homeதலையங்கம்அயோத்தி ராமர் கோவிலும் தேர்தலும்!

அயோத்தி ராமர் கோவிலும் தேர்தலும்!

அயோத்தியில் ராமர் கோவில் வரும் 22ம் தேதி திறக்கப்படுகிறது. அனைத்துக்கட்சித் தலைவர்களும் சமூக பிரமுகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சோனியா, கார்கே, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் விழாவில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்து விட்டனர்.

அது மட்டுமல்ல, பூரி சங்கராச்சாரியார் உள்ளிட்ட 4 சங்கராச்சாரியார்களும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு என்ன காரணம்? அயோத்தியில் கட்டி முடிக்கப்படாத நிலையில் ராமர்கோவில் அவசரம் அவசரமாக திறப்பதை ஏற்க முடியாது; அது சனாதன தர்மத்திற்கு எதிரானது என்பது சங்கராச்சாரியார்களின் முடிவு. அதுவும் பிரதமர் மோடியால் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்பதும் அவர்களின் வாதம்.

பிறகு ஏன் இந்த அவசர கோலம் என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தல் தான் அதற்குக் காரணம். ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து இதுவரை எந்த வாக்குறுதியையும் உருப்படியாக நிறைவேற்றியதில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

அதையெல்லாம் மறைத்து விட்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக… தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் ராமர் கோவில்.
ராமரை தேர்தல் பிரசாரக் கருவியாகப் பயன்படுத்தி, பக்தியை மூலதனமாக்கி வாக்குசேகரிக்கும் வித்தையில் பாஜக ஈடுபடுகிறது. அயோத்தி ராமர் கோவில் ஏதோ பாஜகவுக்கு மட்டுமே சொந்தமானது என்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இறை நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பமும் உரிமையும் ஆகும். பக்தியை அரசியலுக்கான முதலீடாக மாற்றுவது ஜனநாயகத்திற்கு & அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமல்ல ஆன்மிகத்திற்கும் எதிரா னதே. ராமர்கோவில் திறப்பு ஓர் மத நிகழ்வல்ல, அது ஓர் அரசியல் நிகழ்வாகத்தான் தோன்றுகிறது.

இப்படியெல்லாம் நாடெங்கும் பாஜக மீதான விமர்சனங்கள் நடைபெற்று வருகிறது. மக்களின் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை கண்டு காலம்காலமாக வாழக்கூடிய இந்தியத் திருநாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்கும் செயலை பாஜக தொடர்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
இது ஜனநாயக நாட்டுக்கு நல்லதல்ல!

படிக்க வேண்டும்

spot_img