fbpx
Homeபிற செய்திகள்மனிதனுக்கு மாற்றாக ஏஐ- என்ன நடக்கப் போகிறதோ?

மனிதனுக்கு மாற்றாக ஏஐ- என்ன நடக்கப் போகிறதோ?

உலகில் ஏஐ என்பது தான் இப்போது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி வருகை என்பது ஏஐ துறையை மொத்தமாக மாற்றிப் போட்டது. சாட் ஜிபிடியின் வெற்றிக்குப் பிறகு பல்வேறு ஏஐ நிறுவனங்கள் வந்துவிட்டன.

மருத்துவம், பொருளாதாரம் தொடங்கி பல்வேறு துறைகளிலும் ஏஐ சார்ந்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு போட்டியாக இருக்கும். மனிதர்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இந்த ஏஐ தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

தொடக்கம் முதலே ஏஐ துறையில் ஆர்வம் காட்டி வருபவர்களில் ஒருவர் உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். இன்று உலகைப் புரட்டிப் போடும் சாட் ஜிடிபியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தை முதலில் உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். இவர் ஏஐ வளர்ச்சி குறித்துத் தொடர்ந்து எச்சரித்தும் வருகிறார்.

அடுத்த ஒரே ஆண்டில் ஏஐ தொழில்நுட்பம் சாதாரண ஒரு மனிதனை விடப் புத்திசாலியாக இருக்கும் என்றும் வரும் 2029ஆம் ஆண்டளவில், அது அனைத்து மனிதர்களையும் சேர்த்தால் இருக்கும் அறிவை விடப் புத்திசாலித்தனமாக மாறக்கூடும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இப்போது மின்னல் வேகத்தில் இருக்கும் நிலையில், அதனால் சில மோசமான ஆபத்துகளும் ஏற்படலாம் என்பதே வல்லுநர்கள் எச்சரிக்கையாக இருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பம் ஏற்படுத்தும் மிகப் பெரிய பாதிப்பாக மனிதர்களுக்கு வேலையிழப்பு இருக்கும்.

ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களில் வேலையிழப்பு ஆபத்து ஆரம்பித்துவிட்டது. இந்தச் சூழலில் ஏஐ மனிதர்களுக்கு இணையாக மாறினால் வேலையிழப்பு மேலும் மோசமாக இருக்கும் என்பதே எச்சரிக்கையாக இருக்கிறது.

அதிநவீன தொழில்நுட்பங்கள் வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் மனித குலத்திற்கு பாதிப்பு தரும் தொழில்நுட்பம் வந்துவிடக் கூடாது. எனவே ஏஐ தொழில்நுட்பத்தை புகுத்துவதில் உலக நாடுகள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

அபரிமிதமாக வளரத் தொடங்கிய ஏஐ-யைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்ற சூழ்நிலை உருவாக வேண்டும். மனித வளத்திற்குப் பாதிப்புகள் ஏற்படுத்தாக ஏஐ உருவாக வேண்டும். மனிதர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும் ஏஐ உருவாக்கப்பட வேண்டும்.

மனித சக்திக்கு மாற்று சக்தியாக & அதை விட உயர்வான சக்தியாக ஏஐ உருவாகிக் கொண்டிருக்கிறது. என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ, தெரியவில்லை.
நல்லதே நடக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img