கிருஷ்ணகிரியில், சென்னை சாலையில் அமைந்துள்ள கே.ஆர்.சி., திருமண மண்டபம் அருகே, அ.தி.மு.க., தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது: இந்த தேர்தல் இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் நாங்கள்தான் முதன்மையான கட்சி என சொல்லி வருகின்றனர். மக்களை திசை திருப்பி குழப்பத்தை ஏற்படுத்த இவ்வாறு சொல்லி வருகின்றனர்.
தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க.,தான். அ.தி.மு.க.,வைப் பற்றி பல்வேறு கருத்துக்களை பலரும் சொல்லலாம். எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்தபோதும் இதே போன்ற கருத்தைத்தான் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆர்., கவலைப்படவில்லை. கட்சித் தொண்டர்களை நம்பி களத்தில் இறங்கி வெற்றி பெற்றார்.
அவர் உருவாக்கிய இயக்கம் தான் அ.தி.மு.க., அதே போன்று ஜெயலலிதாவும் கட்சியைக் காப்பாற்றி, நம்மையும் காப்பாற்றி 16 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க., தமிழகத்தில் முதல் கட்சி என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். 2 கோடி தொண்டர்களை நம்பித்தான் இந்த தேர்தலை சந்திக்கின்றோம்.
தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் போன்ற பலம் வாய்ந்த கட்சிகள் நம்முடன் உள்ளன. நம்மை எதிர்ப்பவர்கள் பண பலம் படைத்தவர்கள். அராஜகம் படைத்தவர்கள். அவர்கள் சமூக விரோத செயலில் ஈடுபட்டு பணத்தை சேர்த்து நம்முடன் போட்டியிடுகின்றனர். நமது வேட்பாளர் ஜெயபிரகாசை 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், லோக்சபா வேட்பாளர் ஜெயபிரகாஷ், மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், தே.மு.தி.க., மாவட்ட தலைவர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன், கிருஷ்ணமூர்த்தி, சமரசம், ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன், ஜெயபால், நகர செயலாளர் கேசவன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தங்கமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, முன்னாள் எம்.பி., பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.