fbpx
Homeதலையங்கம்நடிகர் விஜய் வெளியிட்ட தெளிவில்லாத அறிக்கை!

நடிகர் விஜய் வெளியிட்ட தெளிவில்லாத அறிக்கை!

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது. எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை

2019ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் தற்போது அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள்,. சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிசெய்கிறது

குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.

எனினும், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவும் எதிர்ப்பு நிலவுகிறது. தங்களது மாநிலத்தில் வங்காளிகள் ஆதிக்கம் அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்றே வரிகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால்.. இந்த அறிக்கையில் எந்த அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தது? யார் கொண்டு வந்தார்கள்? என்று ஒரு வார்த்தை கூட இல்லை. கண்டனம் என்கிற வார்த்தை கூட இல்லாமல் கண்டன அறிக்கையை விஜய் வெளியிட்டு உள்ளார்.

முக்கியமாக இந்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை விஜய் ஒரு வார்த்தையில் கூட எதிர்க்கவில்லை. மாறாக இந்த சட்டத்தை நிறைவேற்ற கூடாது என்று மாநில அரசுக்கு விஜய் கோரிக்கை விடுத்துள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சட்டத்திற்கு எதிராக ஏற்கனவே திமுக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்துவிட்டனர். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் இந்த சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.
தமிழ்நாட்டில் இதை அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறி வருகிறார். அப்படி இருக்க.. மத்திய அரசை விமர்சிக்காமல் மாநில அரசை விஜய் விமர்சனம் செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் இன்னும் தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு இருக்கலாம். பொத்தாம் பொதுவாக இப்படி அறிக்கை வெளியிடுவது புதிதாக அரசியலில் கால் பதித்து இருக்கும் விஜய்க்கு பின்னடைவைத் தரும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள் தமது கருத்தை அழுத்தமாக… தெளிவாக தெரிவிக்க வேண்டும். பட்டும் படாமலும் கருத்து தெரிவிப்பது எந்தவிதத்திலும் கட்சியின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்காது என்பதை த.வெ.க தலைவர் நடிகர் விஜய் புரிந்து கொள்ள வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img