fbpx
Homeதலையங்கம்பத்திரப்பதிவு சேவைகளில் வருகிறது அதிரடி மாற்றம்!

பத்திரப்பதிவு சேவைகளில் வருகிறது அதிரடி மாற்றம்!

சொத்து பத்திரங்கள் தொடர்பான பெரும்பாலான சேவையை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளும் சேவையை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வழங்கி வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அரசின் சேவைகள் படிப்படியாக ஆன்லைனுக்கு மாற்றப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையால் சேவைகள் எளிமையாக்கப்படுவதுடன் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவு பணிகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்காக 2000-ல் ஸ்டார் என்ற சாஃப்ட்வேரும், 2018 ல் ஸ்டார் 2.0 என்ற சாஃப்ட்வேரும் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் பெரும்பாலான பத்திரப்பதிவு பணிகள் ஆன்லைனுக்கு சென்றன.
இந்த மென்பொருட்களால் சொத்து பரிமாற்ற விபரம், பத்திரப்பதிவு நேரம் ஒதுக்குதல், வில்லங்க சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல பணிகள் செய்யப்பட்டு வந்தன.

ஸ்டார் 2.0 யை மேம்படுத்தும் வகையில், தற்போது ஸ்டார் 3.0 என்ற மென்பொருள் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் 1895 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பத்திரங்கள் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுகின்றன.
இதனால் சொத்து வாங்குவோர் 159 ஆண்டுகால பத்திரங்களை பார்வையிட சார்பதிவாளர் அலுவலகம் வரத் தேவையில்லை. ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.

பொதுவாக பத்திரப்பதிவுத் துறையில் அதிகளவில் பணம் புழங்குவதால் அங்கு லஞ்சத்திற்கு பஞ்சமிருக்காது என்று கூறப்படுவதுண்டு. இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ்நாடு அரசு இதுபோன்ற சேவைகளை ஆன்லைனிலேயே செய்து கொள்ளும் நடைமுறைகளைப் புகுத்தி வருகிறது. அனைத்து துறைகளின் சேவைகளையும் ஆன்லைனில் பெறுவதற்கான பணி மேம்படுத்தப்பட வேண்டும்.

ஸ்டார் 3.0 மென்பொருள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில், பத்திரப் பதிவு துறையில் இன்னும் பல அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை!

படிக்க வேண்டும்

spot_img