திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பக ராஜ் திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆவின் அலுவலகத்தில் உள்ள விற்பனை நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலி யுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி தேர்தல் நாளில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணிகளும், விழிப்புணர்வு ஓட்டப்பந்தயங்களும் நாட்டுப்புற கலைஞர்கள் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன வீடியோ வாகனம் வாயிலாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆவின் அலுவலகத்தில் அமைந்துள்ள பால் விற்பனையகத்தில் வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி தேர்தல் நாளில் அனை வரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் ஆவின் மூலமாக விநியோகிக்கப்படும் 7.35 லட்சம் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப் புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.



