Homeபிற செய்திகள்நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.62.10 லட்சம் உண்டியல் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.62.10 லட்சம் உண்டியல் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயர், அரங்கநாதர் மற்றும் நரசிம்மர் கோவில்களில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன. இதில் ரூ.62 லட்சத்து 10 ஆயிரத்து 573 ரொக்கம், 133 கிராம் தங்கம், 190 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இதேபோல் நாமக்கல் அரங்கநாதர், நரசிம்மர் கோவில்களிலும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று 3 கோவில்களிலும் இருந்த 13 உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) சந்திரன் மற்றும் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.
ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய காணிக்கை எண்ணும் பணி இரவு 9 மணி வரை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் மொத்தம் ரூ.62 லட்சத்து 10 ஆயிரத்து 573 ரொக்கம், 133 கிராம் தங்கம், 190 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின் போது ரூ.52 லட்சத்து 46 ஆயிரத்து 165 ரொக்கம், 64 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img