அகில இந்திய தீவிர சிகிச்சைக் கழகத்தின்(Indian Society of Critical Care Medicine – ISCCM) கோவை கிளையின் சார்பில், இந்த ஆண்டிற்கான ஐஎஸ்சிசிஎம் தின விழா நவம்பர் 1-ஆம் தேதி கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னீஸ் ரெசிடென்சியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டின் கருப்பொருளாக அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி (Basic Life Support – BLS) மற்றும் பக்கவாதம் (Brain Stroke) குறித்த விழிப்புணர்வு ஆகியவை இடம்பெற்றன. பொதுமக்களிடையே உயிர்காக்கும் முதலுதவி முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவசர காலங்களில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அடிப்படைத் திறன்களைப் பயிற்றுவிப்பதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.

கோவை மருத்துவ மைய மருத்துவ கல்லூரியின் (KMCH IHSR) தீவிர சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் என்.செல்வராஜன் வரவேற்புரை வழங்கினார். அப்போது, அடிப்படை உயிர் காக்கும் பயிற்சியைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தாம் முயற்சி செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார். ஐஎஸ்சிசிஎம் (ISCCM) கோவை கிளையின் செயலாளரும், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவருமான டாக்டர் விவேகானந்தன், அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் கோவை கிளையின் வளர்ச்சி குறித்துப் பேசினார். கடந்த 1998-ஆம் ஆண்டு டாக்டர் கி. ராஜாசந்திரன், டாக்டர் ஒய்.ஒய்.ராவ் மற்றும் டாக்டர் என். செல்வராஜன் ஆகியோரால் 30 உறுப்பினர்களுடன் இந்தியா வின் ஏழாவது கிளையாகத் தொடங்கப்பட்ட ஐஎஸ்சிசிஎம் கோவை கிளை, இன்று 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வலுவான அமைப்பாக வளர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும், ஐஎஸ்சிசிஎம் கோவை கிளையின் முன்னாள் தலைவரும், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவருமான டாக்டர் எம்.என். சிவகுமார் உள்ளிட்ட கோவையைச் சேர்ந்த மருத்துவர்கள் அகில இந்திய அளவில் ஐஎஸ்சிசிஎம் அமைப்பின் முக்கியப் பொறுப்புகளை வகிப்பது கோவைக்குப் பெருமை சேர்ப்பதாகக் குறிப்பிட்டார்.
தலைமை உரையாற்றிய அமைச்சர் சம்பத்குமார், கடந்த 28 ஆண்டுகளாக ஐஎஸ்சிசிஎம் கோவை கிளை ஆற்றிவரும் மருத்துவச் சேவைகளையும் அதன் வளர்ச்சிப் பணிகளையும் பாராட்டினார். கோவையை ஒரு முக்கிய மருத்துவ மையமாகவும் (Medical Hub), வெளிநாட்டினர் வந்து சிகிச்சை பெறும் அளவிற்கு மருத்துவச் சுற்றுலா மையமாகவும் (Medical Tourism) உயர்த்துவதில் ஐஎஸ்சிசிஎம் கோவை கிளையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.
மேலும், அடிப்படை உயிர்காக்கும் பயிற்சியைத் தனியார் பள்ளிகளுக்கு மட்டுமின்றி அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த ஐஎஸ்சிசிஎம் கோவை கிளை உதவ வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தாம் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஐஎஸ்சிசிஎம் கொடியையும் அமைச்சர் முறைப்படி வெளியிட்டுச் சிறப்பித்தார்.

ஐஎஸ்சிசிஎம் கோவை கிளையின் தலைவரும், கோவை மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவருமான டாக்டர் கோபிநாதன், பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் ஆரம்ப அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது, பக்கவாதம் ஏற்பட்டால் உடனடியாக மேற் கொள்ள வேண்டிய நடவடிக் கைகள் மற்றும் தாமதமின்றி மருத்துவமனைக்குச் செல்வதன் அவசியம் ஆகியவற்றை அனை வருக்கும் எளிதில் புரியும் வகையில் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவர் டாக்டர் லட்சுமிகாந்த் சரண், திடீரென்று இதயம் நின்றுபோகும் ஒருவருக்கு எவ்வாறு உடனடியாக நெஞ்சழுத்தம் வழங்கி உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதை விளக்கினார். குறிப்பாக, நெஞ்சழுத்தம் மட்டுமே வழங்கும் உயிர்காக்கும் முறையான COLS (Compression-Only Life Support) பயிற்சியைச் செயல்முறை விளக்கத்துடன் செய்து காட்டினார்.
கோவையின் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து சுமார் 100 ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மனித உடலின் அமைப்பைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள ‘மாணிக் கின்’ பயிற்சி பொம்மைகளைப் பயன்படுத்தி, ஆசிரியர்கள் அனைவரும் நெஞ்சழுத்தம் வழங்கும் முறையை தீவிர சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவர்களும், ரெஸ்பிரேட்டரி தெரப்பிஸ்டுகளும் கற்றுக்கொடுத்தனர். கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர் களுக்கும் உயிர்காப்பும் இன்றிய மையா முதலுதவி வழிமுறைகளும் என்ற டாக்டர் செல்வராஜன் எழுதிய புத்தகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, அமைச்சர் சம்பத்குமார், மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, COLS உயிர்காக்கும் பயிற்சியைத் தாமும் நேரடியாகச் செய்து கற்றுக்கொண்டார்.
ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவர் டாக்டர் செந்தில்நாதன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஐஎஸ்சிசிஎம் கோவை கிளையின் பொருளாளரும், நீரிழிவு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவருமான டாக்டர் செந்தில்குமார் நன்றி கூறினார்.



