சென்னையின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியானது (ஏ.எம்.ஜெயின் கல்லூரி) சென்னை பல்கலைக்கழத்தின் தமிழ் மேம்பாட்டுச் சங்கப் பலகை மற்றும் சந்தியா பதிப்பகத்துடன் இணைந்து, “பல்துறை சார்ந்த தமிழியல் கல்வியும், அறிவியல் முன்னேற்றமும்” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்வை அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய இரு நாள்களில் நடத்தியது.
இந்நிகழ்வை கவிஞர் வைரமுத்து தொடங்கி வைத்து விழா பேருரையாற்றினார். தொடக்க விழாவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் மா.இராசேந்திரன், இலங்கை தேசியக் கல்வி நிறுவன தமிழ் மொழித் துறை இயக்குநர் முனைவர் முருகேசு தயாநிதி, சந்தியா பதிப்பகத்தின் உரிமையாளர் சந்தியா நடராஜன், ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் செயலர் ஸ்ரீ உதன் குமார் சோர்டியா மற்றும் இணைச் செயலர் ஸ்ரீ ஹேமந்த் பி.சோர்டியா, முனைவர் ரம்யா, முனைவர் சுரேகா, துணைப் புலத்தலைவர் முனைவர் வெங்கடரமணன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த 25-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் சிறப்புரையாற்றினர்.
இந்த கருத்தரங்கின் நோக்கம் குறித்து ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் செயலர் ஸ்ரீ உதன் குமார் சோர்டியா பேசுகையில், “தமிழ் மொழி மீதான பன்முகப் பார்வையை மாணவர்களிடையே விதைக்கும் நோக்கில் இந்த கருத்தரங்கை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்திருக்கிறோம்“ என்றார்.
கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியரும், ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஏ.கோ தண்டராமன் பேசுகையில்,“ சமூகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் ஒருசேர இணைந்து மொழியும் வளர வேண்டும், என தெரிவித்தார்.
மேலும், இதில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை தலைவர் முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன், மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ச.திருநாவுக்கரசு, நியூசிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் பயிற்றுநர் முனைவர் இலக்குவன் சொக்கலிங்கம், விழுப்புரம், எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.தாமரைக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



