fbpx
Homeபிற செய்திகள்அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் தேவை!

அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் தேவை!

தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளிலும் கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு, இப்போது நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவடைந்துள்ளது.


இந்த திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகள் வருகை விகிதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. மேலும் குழந்தைகளின் சுகாதார விளைவுகளும் கணிசமாக மேம்பட்டுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 63.2% குறைந்துள்ளது. மேலும், மாணவர்களிடையே கடுமையான நோய்கள் 70.6% குறைந்துள்ளன.

இந்த புள்ளிவிவரங்கள் ஆரோக்கியமான மற்றும் கல்வியில் அதிக கவனம் செலுத்தும் மாணவர் சமூகத்தை வடிவமைப்பதில் திட்டத்தின் பங்கை எடுத்துக்காட்டுகின்றன.
பிப்ரவரி 2025 வரை 34,987 பள்ளிகளில் மொத்தம் 17.53 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வந்த இத்திட்டத்தில் சமீபத்திய விரிவாக்கம் மூலம் கூடுதலாக 3.05 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.


இந்த காலை உணவுத் திட்டம் மூலம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு முன்மாதிரியாக விளங்குகிறது. சில மாநிலங்கள் இத்திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கி விட்டன. பல மாநிலங்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருகின்றன. கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இத்திட்டத்தை செயல்படுத்தி வருவது இத்திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமையாகும்.


இத்திட்டத்தின் விரிவாக்கம் இத்தோடு முடிந்து விடக்கூடாது என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. இந்த திட்டம் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


ஏனென்றால் அரசு பள்ளி உயர் வகுப்புகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளில் பலரும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்.


மேலும், பலரும் நீண்ட தூரம் நடந்தோ சைக்கிளிலோ பள்ளிக்கு வந்து செல்லும் நிலை காணப்படுகிறது. அவர்களுக்கு வீட்டில் சரியான நேரத்தில் காலை உணவு கிடைப்பதற்கு பலரது வீடுகளில் வாய்ப்பு இல்லை. அதனால் தான் இந்தத் திட்டத்தை மேல்நிலைப்பள்ளிகள் வரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.


தற்போதைக்கு இத்திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை என்ற போதிலும் அதற்கான வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. இந்த கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு நிச்சயம் போயிருக்கும். விரைவில் நல்லதோர் முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் பெற்றோர் காத்திருக்கிறார்கள்!

படிக்க வேண்டும்

spot_img