fbpx
Homeபிற செய்திகள்போலி தூதரகம் - செயலிழந்து விட்டதா உளவுத் துறைகள்?

போலி தூதரகம் – செயலிழந்து விட்டதா உளவுத் துறைகள்?

உ.பி. மாநிலம் காசியாபாத் நகரில் 2017 முதல் போலி தூதரகம் ஒன்று செயல்பட்டு வந்ததை அம்மாநில சிறப்பு பணிக்குழு (STF) சில நாட்களுக்கு முன் கண்டுபிடித்தது. வெஸ்டார்டிகா, செபோர்கா, பவுல்வியா மற்றும் லோடோனியா போன்ற கற்பனையான நாடுகளின் தூதரகமாக அது செயல்பட்டு வந்துள்ளது. இந்தச் செய்தி நாடு முழுவதும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது.


இந்த மோசடி தொடர்பாக ஹர்ஷவர்தன் ஜெயின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி தூதரகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் உள்துறை அமைச்சகத்தின் ரப்பர் ஸ்டாம்புகள், பாஸ் போர்ட்கள் மற்றும் பெருமதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் கைப்பற்றப்பட்டது. தவிர, போலி வெளிநாட்டு கொடி மற்றும் தூதரக பெயர் பலகையுடன் கூடிய நான்கு சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.


மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்ததாகவும், ஹவாலா மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


முக்கிய நகரில் வெளிநாட்டு தூதரகம் என்ற பெயரில் வெளிப்படையாக இதுபோன்ற துணிச்சலான மோசடியில் ஈடுபட்டது உளவுத் துறையின் செயலற்ற தன்மையையே வெளிக்காட்டுகிறது என்றால் மிகையன்று. மேலும், தூதரகங்களை மேற்பார்வையிடும் பொறுப்பினைக் கொண்டுள்ள உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமும் அம்பலத்துக்கு வந்துள்ளது.


மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறை மற்றும் மேற்பார்வை வழிமுறைகள் படுமோசமாக தோல்வியடைந்து விட்டதைத் தான் இந்த போலி தூதரகம் நமக்குச் சொல்கிற செய்தியாகும்.


தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நம்பிக்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.


இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஹர்ஷவர்தன் ஜெயின், 2018ம் ஆண்டு முதல் வாடகைக்கு வீடு எடுத்து போலி தூதகரம் நடத்தி வந்தது உள்துறை அமைச்சகத்திற்கோ உளவுத்துறைக்கோ மாநில அரசின் உளவுப்பிரிவு போலீசாருக்கோ தெரியாமல் போனது எப்படி? உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும்.


7 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த போலி தூதகரத்தை இப்போதாவது கண்டுபிடித்தார்களே…. மாநில சிறப்பு பணிக்குழுவுக்கு பாராட்டும் உரித்தாகட்டும்!

படிக்க வேண்டும்

spot_img