விழுப்புரம் மாவட்டத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 64 பள்ளி வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்தார்.
வட்டாரப் போக்குவரத்துத்துறை சார்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வுப் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைத்து, பள்ளி வாகனங்களிலுள்ள வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் கூறியதாவது: விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின்கீழ், விழுப்புரம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூர் வட்டங்களில் செயல்படும் 66 பள்ளிகளின் 243 வாகனங்கள், திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் திண்டிவனம், வானூர், மரக்காணம் வட்டங்களில் செயல்படும் 36 பள்ளி களின் 187 வாகனங்கள், செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தின் கீழ் செஞ்சி, மேல் மலையனூர் வட்டங்களில் செயல்படும் 27 பள்ளிகளின் 93 பள்ளி வாகனங்கள் என மொத்தம் 129 பள்ளிகளின் 523 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதல் கட்டமாக 325 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இவற்றில் 64 வாகனங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை தகுதியிழப்பு செய்யப்பட்டன.அரசு விதிகளுக்குள்பட்ட பள்ளி வாகனங்கள் போக்குவரத்து ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
ஆய்வின்போது வாகனங்களில் பழுது கண்டறியப்பட்டால், அவற்றை சரிசெய்து மீண்டும் அனுமதி பெற்று இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள பள்ளி வாகனங்கள் மே மாத இறுதிக்குள் ஆய்வுக் குள்படுத்தி, வாகனங்கள் நல்ல முறையில் உள்ளதை உறுதிசெய்ய வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதி பெறாத வாகனங்களை பள்ளிப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட பள்ளி திர்வாகத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நிகழாண்டு முதல் ஒவ்வொரு பள்ளி வாகளத்திலும் பெண் உதவியாளரை நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்களை இயக்கும் போது ஓட்டுநர்கள் தின மும் கவனிக்க வேண்டிய நடை முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் சி.பழனி கூறினார்.
இதைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், தீத்தடுப்பு தொடர்பான விளக்கவுரை மற்றும் செயல்விளக்கத்தை பார்வையிட்ட ஆட்சியர், வாகன ஓட்டுநர்களுக்கு கண் மருத்துவப் பரிசோதனை நடைபெறுவதையும் பார்வையிட்டார்.
108 அவசர சிகிச்சை ஊர்தி பணியாளர்கள் மூலம் முதலுதவி சிகிச்சையளிப்பது தொடர்பான செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், திண்டிவனம் சார்-ஆட்சியர் திவ்யான்ஷிநிகம், திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், வாகன ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சுந்தர்ராஜன், முருகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.