fbpx
Homeதலையங்கம்5 மாநில தேர்தலில் எழுச்சியும் வீழ்ச்சியும்!

5 மாநில தேர்தலில் எழுச்சியும் வீழ்ச்சியும்!

மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக 255 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 111 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. படுதோல்வியைச் சந்தித்த காங்கிரசுக்கு எத்தனை இடம் கிடைத்தது தெரியுமா? 2 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல், சட்டம் ஒழுங்கு சீர்கெடுதல், பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டநிலையில், இந்த ஆண்டு தேர்தலை பாஜக சந்திந்தது.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

உ.பி.யில் சுதந்திரத்திற்குப் பின் தொடர்ந்து இருமுறை முதல்வர் என்ற பெருமையை யோகி ஆதித்யநாத் பெற்று சாதனை படைத்துள்ளார். ராகுலும் பிரியங்காவும் களமிறங்கி உழைத்தபோதும் காங்கிரஸ் பெரும் சரிவைச் சந்தித்து இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, பல வரலாறுகளை கொண்ட காங்கிரஸ் கட்சி, பஞ்சாபில் சிறிய கட்சியான ஆம் ஆத்மியிடம் வீழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், சிரோமணி அகாலிதள், பாஜக ஆகிய கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன.

விவசாயிகள் போராட்டம், பிரதமர் மோடி எதிர்ப்பு, காங்கிரசில் பட்டியலினத்தைச் சேர்ந்த முதல்வர் வேட்பாளர் என பஞ்சாபில் பல்வேறு யூகங்களை வெளிப்படுத்தி பரபரப்பு நிலவி வந்தநிலையில், காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை படுமோசமாக இழந்துள்ளது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் பஞ்சாப் உள்பட 3 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி புரிந்து வந்தது. தற்போது இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தன் மூலம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாக உருவான ஆம் ஆத்மி கட்சியும், தற்போது 2 மாநில ஆட்சியை தன்வசப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? என்பதை அக்கட்சி அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஒட்டுமொத்தமாக தேர்தல் நடந்த 5ல் 4 மாநிலங்களை பாஜக வென்றெடுத்துள்ளது. இந்த எழுச்சியை ஏற்படுத்தியதற்கு பிரதமர் மோடியின் தலைமையே… அவர் மீதான நம்பிக்கையே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மக்கள் இதயங்களில் மோடி தனி இடம் பிடித்திருப்பதையே இது காட்டுகிறது.
இந்த தேர்தலில் வெற்றி நாயகர்களான பிரதமர் மோடிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வாழ்த்துகள்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

படிக்க வேண்டும்

spot_img