மேட்டுப்பாளையத்தில், 2019ம் ஆண்டு டிச., 2ம் தேதி, கனமழையால், நடூர் ஏ.டி., காலனியில் தனியார் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இதில் ஐந்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த நாளை பல்வேறு கட்சியினர் மற்றும் நினைவேந்தல் குழு இணைந்து, நினைவு தினமாக அனுச்சரிக்க முடிவு செய்தது.
இந்த விபத்தின் நான்காம் ஆண்டை ஒட்டி விபத்து நடந்த இடத்தில், நினைவஞ்சலி செலுத்த போலீசிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
ஆனால், தடையை மீறி நினைவஞ்சலி செலுத்த ஊர்வலமாக செல்வதாக கூறினர்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்காளர் பாலாஜி தலைமையில், காவல் ஆய்வாளர்கள் மேட்டுப்பாளையம் நவநீதகிருஷ்ணன், காரமடை ராஜசேகர், சிறுமுகை சித்ரா மற்றும் உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், சிலம்பரசன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திலக் உட்பட 300 க்கும் மேற்பட்ட போலீசார் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், காரமடை ரோடு, விபத்து நடந்த இடம் ஆகிய மூன்று இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தண்ணீரை பீச்சி அடிக்கும் வஜ்ரா வாகனங்கள், பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.