2023ம் ஆண்டு முடிந்து 2024ம் ஆண்டு பிறந்து விட்டது. கடந்த ஆண்டில் நிகழ்ந்தவற்றை திரும்பிப் பார்த்தோம். மகிழ்ச்சியை விட வேதனையே அதிகம் இருந்தது.
நம் நாட்டை பொறுத்தவரை, 2023ல் சந்திரயான 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து மகிழ்வைத் தந்தது. கொரோனாவின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.
புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்டது. ஜி20 மாநாட்டை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தில் உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
இப்படி பல நல்லவைகள் நடந்திருந்தாலும் நடக்கக்கூடாத பலவும அரங்கேறின.
பல மாதங்களாக நடந்த மணிப்பூர் கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, பெண்களை நிர்வாணமாக அழைத்துச்சென்ற கொடுமை, ஒடிசா ரயில் விபத்தில் 280 பேர் பலி, 70 பேர் உயிரை பலி கொண்ட சிக்கிம் கனமழை, எல்லாவற்றையும் விட சென்னையைப்புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் & தென் மாவட்டங்களை துவம்சம் செய்த பெருமழை – உயிரிழப்புகள்… இது போன்றவற்றையும் கனத்த இதயத்தோடு எதிர்கொண்டோம்.
உலக அரங்கில் ஓராண்டைத் தாண்டி ரஷ்யா & உக்ரைன் போர் நீடிக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. போரால் பல்லாயிரம் பேர் குறிப்பாக அப்பாவிகள், குழந்தைகள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவும் கடந்து போகும்
என்பதற்கிணங்க 2023ல் நடந்த அதிக சோக நிகழ்வுகளை கடந்து இன்று 2024 புத்தாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். நாட்டு மக்கள் புத்தாண்டை மிகவும் கோலகலமாக கொண்டாடி வரவேற்றுள்ளனர்.
தலைவர்கள் எல்லாம் வாய் நிறைய வாழ்த்தி இருக்கிறார்கள். அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தேறி இருக்கிறது. நாட்டு மக்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டிலும் சரி வீட்டிலும் சரி மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு. நல்லதே நடக்கட்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!