16 ஆண்டு காலமாக நடந்து வந்த 28 பேரை பலி கொண்ட வாரணாசி குண்டு வெடிப்பு வழக்கில் பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியை உலுக்கும் வகையில் 2 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
உத்திரப்பிரதேசத்தையே உலுக்கிய இந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு தீவிர விசாரணை நடத்தி வலியுல்லாகான் என்ற பயங்கரவாதிக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தது. உத்திரப்பிரதேசத்தின் பிரக்யா ராஜை சேர்ந்த அவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது.
அவர் வங்காள தேசத்தின் பயங்கரவாத குழுவை சேர்ந்தவர். வலியுல்லாகான் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கொலை, கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளும், வெடிபொருள் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. அவர் மீது மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
முதலில் இந்த வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் விசாரிக்கப்படுவதாக இருந்தது.
ஆனால் அங்கு வாரணாசி வக்கீல்கள் யாரும் ஆஜராக மறுத்துவிட்டனர். இதையடுத்து காசியாபாத்தில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 121 சாட்சிகள் கோர்ட்டில் நிறுத்தப்பட்டனர்.
16 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு சமீபத்தில் முடிவடைந்தது. அடுத்த 4ம் தேதி காசியாபாத் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி சின்ஹா தீர்ப்பளித்தார்.
2 வழக்குகளில் பயங்கரவாதி வலியுல்லாகான் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அந்த வழக்குகளில் அவர் குற்றவாளி என்று அறிவித்தார். மூன்றாவது வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வலியுல்லாகானை விடுதலை செய்தார்.
தண்டனை விவரங்கள் 6ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். அதன்படி தண்டனை அறிவிப்பிற்காக காசியாபாத் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு நேற்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது.
வலியுல்லாகானுக்கு ஒரு வழக்கில் தூக்கு தண்டனையும், மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி சின்ஹா உத்தரவிட்டார்.
குண்டு வெடிப்புகள் நடந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாமதமாகக் கிடைத்தாலும் சரியான நீதி வழங்கப்பட்டுள்ளது.