Homeபிற செய்திகள்127 கூட்டுறவு நிறுவனங்களில் 34,422 பேரின் ரூ.139.63 கோடி நகைக் கடன் தள்ளுபடி - கன்னியாகுமரி...

127 கூட்டுறவு நிறுவனங்களில் 34,422 பேரின் ரூ.139.63 கோடி நகைக் கடன் தள்ளுபடி – கன்னியாகுமரி பயனாளிகள் மட்டற்ற மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 127 கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொதுகடன்களில் சுமார் 34,422 நபர்களுக்கு ரூ.139.63 கோடி மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. பயனாளிகளுக்கு நகைகளும், சான்றிதழ்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நல்வழியில் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில், தலைவர் கலைஞர் பாணியில் ‘சொன்னதைச் செய்வோம் – செய்வதைத்தான் சொல்வோம்’ என்று மே 7-ம் தேதி பதவியேற்ற சில மணி நேரத்திலேயே 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4,000 கொரோனா நிவாரண நிதியுதவி, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம், மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு ஆகிய ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டு, அதனை திறம்பட செயலாற்றி வருகிறார்.

சுய உதவிக் குழுக்களின்
ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி
கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.

ஊரகப் பகுதிகளில் ரூ.1,200 கோடி ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்துவது, ‘நமக்கு நாமே’ திட்டத்தை உள்ளுர் சமூகங்களுடன் இணைந்து ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்துவது, கொரோனா சிகிச்சைப் பணியில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 இலட்சம் கொரோனா இழப்பீட்டுத் தொகை, கொரோனா நோய்த்தொற்றால் காவல்துறையில் உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்குத் தலா ரூ.25 இலட்சம் வீதம் நிவாரணத் தொகை, மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளை முதல்வர் அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி, மக்கள் பாராட்டும்படி திகழ்ந்து வருகிறார்.

110-வது விதியின் கீழ்
அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, முதல்வர் 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், ‘கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என்று பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றும் விதமாக, 110 விதியின்கீழ், நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின்கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.

தகுதியானவர்களின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கணக்கெடுப்பு
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்ததாவது:
தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, கன்னி யாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களின் 5 சவரனுக்கு உட்பட்ட நகைகள் வைத்திருப்பவர்களின் கணக்கெடுப்பு நடைபெற்று, தற்போது முடிவுற்றது.

அனைத்து கூட்டுறவு சங்கங்களிலுள்ள தகுதியான பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 127 கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொதுகடன்களில் சுமார் 34,422 நபர்களுக்கு ரூ.139.63 கோடி மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

பயனாளிகளுக்கு அந்த நகைகளையும் அதற்கான சான்றிதழ்களையும் வழங்குவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார்.

தினக் கூலியால் தவிப்பு தள்ளுபடியால் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் கீழ்வண்ணான்விளை, பகுதியைச் சேர்ந்த பயனாளி கிருஷ்ணமணி (வயது 43) தெரிவித்ததாவது:
என்னுடைய கணவர் கூலி வேலை செய்து வருகிறார்.

அந்த வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறோம். குடும்ப நிலையினை சமாளிப்பதற்காக சரக்கல்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் எனது 24 கிராம் மதிப்புள்ள தங்கத்தினை அடகு வைத்திருந்தேன்.

எங்களது தினக்கூலி வருமானத்தில் காலத்தை கடத்திக்கொண்டு வந்த நிலையில், அடகு வைத்த நகையை எப்படி திருப்புவது என்ற கவலையில் இருந்தோம்.
இந்நிலையில், முதல்வர், கூட்டுறவு சங்கங்களின் 5 பவுனுக்குள் நகைகள் அடகு வைத்திருப்பவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

எங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு எங்களது குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
திணறவைத்த வருத்தம், ஆணையால் சந்தோஷம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த பயனாளி மரிய பொசின் (வயது 44) தெரிவித்ததாவது:

குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் மர வேலை செய்து வருகிறேன். என்னுடைய சிறிய வருமானத்தை கொண்டு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்க்கை நடத்தி வருகிறேன்.

பிள்ளைகள் படிப்பிற்காகவும், ஒரு சில தேவைக்காகவும் என்னிடமிருந்த 24 கிராம் நகையினை தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அடகு வைத்திருந்தேன். அடகு வைத்த நகையை எப்படி மீட்டெடுப்பது என்று வருத்தத்தில் இருந்த நிலையில், நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்ததை அறிந்தேன்.

நான் மிகவும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்ததோடு, என்னுடைய 24 கிராம் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணையினையும் சங்க நிர்வாகிகள் என்னிடம் வழங்கினார்கள்.

எங்களை போன்ற ஏழை, எளிய குடும்பத்தை சார்ந்தவர்களின் நகைக்கடனை தள்ளுபடி செய்த முதல்வருக்கு அனைவரின் சார்பிலும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்பு
பா.ஜாண் ஜெகத் பிரைட்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
ஜா.லெனின்பிரபு,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
கன்னியாகுமரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img