fbpx
Homeபிற செய்திகள்விவசாயிகளுக்கு தீபாவளி போனஸ் கிடைக்குமா?

விவசாயிகளுக்கு தீபாவளி போனஸ் கிடைக்குமா?

காவிரி பாசன மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் கொண்டு வந்துள்ள நெல் மணிகள் நனைந்து ஈரமாகியுள்ளன.

அதனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட ஈரப்பதம் அதிகரித்திருப்பதால், நெல்லை விற்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று முன்கூட்டியே கொள்முதலை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்ததால் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் தொடங்கியுள்ளது.

இதுவரை அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த நிலையில் பருவம் தவறிய மழை தான் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காவிரி பாசன மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

மழையில் நனைந்து ஈரமான நெல்லை விவசாயிகள் பகல் நேரத்தில் சாலையில் காய வைக்கின்றனர். ஆனால், இரவு நேரத்தில் மீண்டும் பெய்யும் மழை அல்லது பனியால் நெல் மீண்டும் ஈரப்பதமாகி விடுகிறது.

மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின்படி 17% ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். ஆனால், இப்போது மழையில் நனைந்த நெல்களின் ஈரப்பதம் 22 முதல் 25% வரை உள்ளது.

இவ்வளவு ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசு தன்னிச்சையாக கொள்முதல் செய்ய முடியாது. மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டும் தான் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய முடியும். இது தான் விவசாயிகளுக்கு பெருங்கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் வேண்டுகோள் வைத்திருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஆனாலும் ஆக்கப்பூர்வமாக எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

விவசாயிகளின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தீபாவளித் திருநாளுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள்ளாக நெல் மூட்டைகளை அவர்கள் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தால் மட்டும் தான் அவர்களால் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாட முடியும்.

இந்த விஷயத்தில் ஒரு மணி நேரத்தைக் கூட வீணாக்காமல் விவசாயிகள் நலன்கருதி ஒன்றிய அரசின் அனுமதியை விரைவாகப் பெற்று ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசும் தன் கடைக்கண் பார்வையை தமிழக விவசாயிகள் மீது, சிறிதும் தாமதமின்றி… உடனடியாக திருப்ப வேண்டும்.
இதனைச் செய்து விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றுவதே அவர்களுக்கான தீபாவளி போனஸ்!

படிக்க வேண்டும்

spot_img