கோவையில் வனவேட்டை தடுப்பு காவல் பணிக்கு தங்களை மீண்டும் நியமிக்க கோரி மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளனர்.
கோவை மாவட்ட கலெக்டரிடம் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில் அதன் நிறுவனத்தலைவர் வக்கீல் புஷ்பானந்தம் தலைமையில் ஆனைகட்டி மற்றும் போளுவாம்பட்டி வனசரக மலைவாழ் மக்கள் மனுகொடுத்தனர். அதன் விவரம் வருமாறு:
நாங்கள் அனைவரும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் நாங்கள் 7 பேரும் கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கோவை வனச் சரகத்தில் பல்வேறு இடங்களில் வனவேட்டை தடுப்பு காவலர்களாக நாங்கள் அனைவரும் தற்காலிகமாக 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்தோம்.
எங்களது அன்றாட பணி யானையை விரட்டும் பணியாகும். எங்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் குடும்பங்கள் உள்ளது.
கோவை மாவட்ட வன அதிகாரி எங்களுக்கு அவர்களின் உத்தரவின் பேரில் தகுந்த முன்னறிவிப்பின்றி எந்தவித தகவலும் சொல்லாமல் திடீரென்று வனத்துறையில் அரசு நிதி இல்லை என காரணம் காட்டி எங்கள் அனைவரையும் வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள். தற்போது நாங்கள் வேலை இல்லாமல் 7 வருடங்களாக இருந்து வருகிறோம்.
எங்களது சமூகத்தில் இருவர் வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் வேலை கிடைக்காத விரக்தியில் குடும்பத்தையும் காப்பாற்ற இயலாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகி இறந்து விட்டனர்.
தற்போது எங்களது வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. கொரோனா காலத்தில் வேலையும் கிடைக்கவில்லை. தற்போது சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருந்து வருகிறது.
எங்களுக்கு அன்றாடம் குடும்பம் நடத்துவதே மிகவும் கஷ்டப்பட்டு வருகிறது. ஆகவே ஐயா அவர்கள் கருணை கூர்ந்து எங்கள் 7 பேருக்கும் மீண்டும் வனவேட்டை தடுப்பு காவலர்கள் பணி திரும்ப கிடைக்க உதவி செய்யும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.