மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.
தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த முடிவிற்குக் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன. பொருளாதார அறிஞர்களும் ஒன்றிய அரசின் தவறான ஜி.எஸ்.டி கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி பாஜகவுக்குள்ளும் இந்த வரிமுறைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பா.ஜ.க எம்.பி. வருண் காந்தி உள்ளிட்டோர் ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மக்களை நாம் காயப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளனர். தற்போது ஜி.எஸ்.டி வரி விதிப்பை ஆர்எஸ்எஸ் தொடர்புடைய வேளாண் அமைப்பும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளது.
விவசாய உபகரணங்கள் மற்றும் உரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்க வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்த பாரதிய கிசான் சங்கம் (பிகேஎஸ்) விவசாயிகளின் கண்டனப் பேரணியை அறிவித்துள்ளது.
இடுபொருட்களின் விலை உயர்வால் நாட்டில் விவசாயிகளின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. உற்பத்தியாளர்களாக இருந்தும் அவர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. எனவே ஒன்றிய அரசு ஜிஎஸ்டியில் உள்ளீட்டு பங்கை பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும்.
பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பாஜக ஆதரவு ஆர்எஸ்எஸ் விவசாயிகள் சங்கமே களமிறங்கி போராடப்போவது ஜிஎஸ்டியால் ஏற்படும் பாதிப்பை வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது.
இதன் பிறகும் அரிசி, பருப்பு, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளித்து விவசாயிகள் துயர் துடைக்க முன்வருமா ஒன்றிய அரசு?