fbpx
Homeதலையங்கம்முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் வெற்றி பெறட்டும்!

முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் வெற்றி பெறட்டும்!

பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது நீட் விவகாரம் குறித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருவதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இதன் பின்னர் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் உடனான சந்திப்பு மனநிறைவுடையதாக அமைந்தது. நான் கூறிய கோரிக்கைகளை பொறுமையுடன் பிரதமர் கேட்டறிந்தார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

எனவே, இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவி செய்ய அனுமதி வழங்க வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை, கட்சத்தீவு மீட்பது குறித்து கோரிக்கை வைத்துள்ளேன்.

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் பயில்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட அனுமதி அளிக்கக்கூடாது. ஜிஎஸ்டி இழப்பை தொடர்ந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தேன் என தெரிவித்தார்.

முக்கியமாக, நீட் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாகவும் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார் என்பதை தெரிவித்ததாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முதலமைச்சர் எடுத்துரைத்த கோரிக்கைகளை மாற்றுக்கட்சி ஆளும் மாநிலம் தானே என நினைக்காமல் பிரதமரும் மற்ற ஒன்றிய அமைச்சர்களும் நிறைவேற்ற முனைவார்கள் என தமிழக மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

முக்கியமாக தமிழக ஆளுநரிடம் தேங்கிக் கிடக்கும் நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட மசோதாக்கள் ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் எப்படி வெற்றிகரமாக அமைந்ததோ அதேபோல டெல்லி பயணமும் மிக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது. அவரது பேட்டியே இதனை துல்லியமாக தெரிவிக்கிறது.

முதல்வரின் டெல்லி பயணம் முழு வெற்றி பெறட்டும்!

படிக்க வேண்டும்

spot_img