திண்டுக்கல் மாவட்டம், தோட்டனூத்து கிராமத்தில் அமைக் கப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் அருகே தோட்ட னூத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் புதியதாக இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு 321 வீடுகள் கட்டும் பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் திறப்பு விழா முன்னேற்பாடு குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடந்தது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் இறுதிக்கட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் கலெக்டர் விசாகன் மற்றும் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் ஆகியோர் துறை அலுவலர்களுக்கு எடுத்துரைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, தோட்ட னூத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை கலெக்டர், மாவட்ட எஸ்.பி. பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், டிஆர்ஒ. லதா, கூடுதல் எஸ்.பி., அருண் கபிலன், திண்டுக்கல் ஆர்.டி.ஒ. பிரேம்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெங்கராஜன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அனுராதா, திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், கிருஷ்ணன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.