‘டி-ஆர்க் பில்ட்’ கண்காட்சியை தமிழகத்தின் மதுரையில் ஏற்பாடு செய்யுமாறு கண்காட்சி ஏற்பாட்டாளர்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி குழும துணைத் தலை வரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான டாக்டர் இ. முத்துராமன் கேட்டுக் கொண்டார்.
‘டி-ஆர்க் பில்ட்’ கண்காட்சி, கடந்த 22 முதல் 25-ம் தேதி வரை புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற்றது. 5000-க்கும் மேற்பட்ட கட்டிடக் கலைஞர்கள், 3000-க்கும் மேற்பட்ட உள்துறை வடிவமைப்பாளர்கள், 2000-க்கும் மேற்பட்ட பில்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் மற்றும் 50000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த 3 நாட்கள் கண்காட்சியில் பங்கேற்றனர்.
‘டி-ஆர்க் பில்ட்’ என்பது வடிவமைப்பு, கட்டிடக்கலை, கட்டிடம் மற்றும் கட்டுமானம் தொடர்பான தொழில் நுட்பங்களின் தனித் துவமான கண்காட்சியாகும். கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் புதுமைகளை ஊக்குவிக்கும் இந்தியாவின் மிகச்சிறந்த அறிவுப் பகிர்வு தளமான இதில் உலகெங்கிலும் உள்ள கண்காட்சியாளர்கள், தொழிற்துறைப் பிரிவினருக்குள் சமீபத்திய தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விரிவான செயல்விளக்கங்கள் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி குழும துணைத் தலைவர் டாக்டர் இ.முத்துராமன் பேசியதாவது: தமிழகத்தில் கட்டுமானத் துறையின் வளர்ச்சி விகிதம் மிகவும் சீராக உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய கட்டுமானத் திட்டங்கள் வருகின்றன.
தமிழ்நாட்டின் 2 மற்றும் 3-ம் அடுக்கு நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் சந்தை கோவிட்-க்கு பிந்தைய சூழ்நிலைக்குப் பிறகு, மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்தியாவில் உள்ள ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கான மிகப்பெரிய சந்தையாக தமிழ்நாட்டின் 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு நகரங்கள் உள்ளன.
எனவே இந்த மாபெரும் கண்காட்சியை அடுத்த ஆண்டு மதுரையில் நடத்துமாறு ஏற்பாட்டாளர்களை கேட்டு க்கொள்கிறேன். இந்தக் கண்காட்சியை மதுரையில் நடத்தத் தேவையான உதவிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி குழுமம் வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.