உலகம் முழுவதும் இருக்கும் அரச குடும்பங்களில் மிகப்பெரும் மரியாதை கொண்ட குடும்பமாக பார்க்கப்படுகிறது இங்கிலாந்து அரச குடும்பம்.
உலகின் சுமார் 25% நிலப்பரப்பை ஆண்ட குடும்பத்தின் ஆளுகையில் இருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் சுதந்திரம் பெற்றுவிட்டாலும், வேல்ஸ், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகள் இன்னும் இங்கிலாந்து அரசகுடும்பத்தின் ஆளுகைக்கு கட்டுப்பட்டே இருக்கின்றன.
இந்த நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரச குடும்பத்தின் மகாராணி தான் இரண்டாம் எலிசபெத். தற்போது தான் இங்கிலாந்து பிரதமர் தேர்தல் முடிந்து புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்றார்.
பொறுப்பேற்றுக் கொண்டதும் கடந்த செவ்வாய்க் கிழமை தான் மகாராணி எலிசபெத்தை நேரில் சந்தித்திருந்தார். இருவருக்கும் இடையிலான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்போது தான் பார்த்த மாதிரி இருக்கிறது.
ஆனால், இந்த நொடி மகாராணி எலிசபெத் உயிரோடு இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாகத் தான் இருக்கிறது.
லண்டனில் உள்ள மேஃபேரில் 1926 ஏப்ரல் 21ம் தேதி ஆறாம் ஜார்ஜ் அரசருக்கும், எலிசபெத் மகாராணிக்கும் மகளாகப் பிறந்தவர் தான் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி. ஜார்ஜ் 1936ல் அரசரானபோதே இவரும் அரசகுடும்பத்தைச் சேர்ந்த வாரிசானார். இரண்டாம் உலகப்போரிலும் பங்காற்றினார்.
எடின்பரோவின் கோமகனாக இருந்த பிலிப்பை 1947ல் திருமணம் செய்துகொண்டார் எலிசபெத். இவர்களுக்கு சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு என்று நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் அரசர் உயிரிழக்க, ஐக்கிய ராஜ்ஜியத்தின் மகாராணியாக 1952ல் பொறுப்பேற்றுக்கொண்டார் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25 தான். அவர் மகாராணியாக பதவியேற்றபோது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் உலகப்புகழ்பெற்ற வின்ஸ்டன் சர்ச்சில். அவருக்குப் பிறகு சர் ஆண்டனி ஈடன் முதல் தற்போதைய லிஸ் ட்ரஸ் வரை தன் வாழ்நாளில் 15 பிரதமர்களைப் பார்த்திருக்கிறார் எலிசபெத்.
என்னதான் மக்களாட்சி வந்துவிட்டாலும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் எலிசபெத் மகாராணியும் அங்கம் வகித்திருக்கிறார். ஐக்கிய ராஜ்ஜியத்தை அதிக காலம் ஆட்சி செய்தவர் இவரே.
இதற்கு முன் விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள் ஆட்சி செய்திருந்த நிலையில், 70 ஆண்டுகள் ஆட்சி செய்து சாதனை படைத்திருக்கிறார். 70வது ஆண்டையொட்டி பிளாட்டினம் ஜூப்லி கொண்டாட்டங்கள் இரு மாதங்களுக்கு முன்புதான் விமரிசையாக நடைபெற்றது.
உலகில் உள்ள அரச குடும்பங்களில் நீண்ட ஆண்டுகள் அரசாட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் என்றால் சும்மாவா? இன்னும் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், 1643 முதல் 1715 வரை ஆண்ட பிரான்ஸ் அரசர் பதினான்காம் லூயிஸை முறியடித்து முதலிடம் பெற்றிருக்கலாம். ஆனால், காலமும் வயோதிகமும் இரண்டாம் எலிசபெத்துக்கு அதனை வழங்கவில்லை.
ஆனால் என்ன? 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி அரசி, 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிட்டிஷாரால் ஆளப்பட்ட காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் பொறுப்பு, பிரிட்டன் திருச்சபையின் மிக உயரிய கவர்னர் பொறுப்பு, பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்வதில் முக்கிய பொறுப்பு என்று உச்ச அதிகாரம் கொண்டவராகவே உயிரை விட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு தான் இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் தனது 99வது வயதில் உயிரிழந்தார். அவரது நூறாவது ஆண்டில் எலிசபெத்தும் உயிரிழந்துவிட்டார்.
பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் சூரியன் அஸ்தமனம் இருக்காது என்று கூறுவார்கள்.
ஏனெனில் அந்த அளவிற்கு பரந்து விரிந்திருந்தது அவர்களது ராஜ்ஜியம். அந்த காலகட்டத்தில் ஆட்சிக்கு வந்த எலிசபெத்தின் காலமும் அஸ்தமித்திருக்கிறது.
உலகப்புகழின் உச்சத்தில் இருந்தாலும் தன்னடக்கத்துக்கு சொந்தக்காரர் எலிசபெத். அஸ்தமித்தது எலிசபெத் மகாராணி மட்டுமல்ல. ஒரு சகாப்தமும் தான்!