குறிப்பிட்ட சில பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இனி கணிதம், இயற்பியல், வேதியியல் அவசியமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்திருக்கிறது.
பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை கட்டாயம் படித்திருந்தால் மட்டுமே, பொறியியல் படிப்பில் சேர முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால், பள்ளிகளில் இந்த படிப்புகளை படிக்காமல் சில குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேரலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு பல மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் சேருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும், கல்வியின் தரத்தை பாதிக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இந்த விதிகளால் கல்வியின் தரம் நிச்சயம் குறையும், வேலையின்மை அதிகரித்து காணப்படும் என்று கல்வியாளர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த மாற்றத்தால், இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும், ஆனால், அடிப்படையான கணிதம் தெரியாமல், மாணவர்கள் தடுமாறுவார்கள் என்பது அவர்களின் கருத்து.
அதேபோல முதலாமாண்டு பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு இளங்கலை டிப்ளமோ பட்டமும் 3 ஆண்டுகள் படிப்பை முடிப்பவர்களுக்கு இளங்கலை தொழிற்கல்வி பட்டமும் இறுதியாண்டை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு பிஇ அல்லது பிடெக் பட்டமும் வழங்கப்படும் என்றும் இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதற்கு வரவேற்பு ஒரு புறமிருந்தாலும் மாணவர்களின் குறிக்கோள் மாறி, கவனம் சிதறும் என்று கல்வியாளர்கள் எச்சரித்து உள்ளனர்.
புதிய தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் தான் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் மாறுபட்ட கருத்துக்களால் குழப்பமே மிஞ்சியுள்ளது.
இந்தக் குழப்பங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறீர்கள்?