கல்கி எழுதிய வரலாற்று சரித்திர நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் செப்டம்பர் 30ந் தேதி வெளியான இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிலர் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து தர்க்கம் செய்தாலும் பொன்னியின் செல்வன் திரைப்படம், பெரும் வரவேற்பையே பெற்றுள்ளது.
ஒரு பெரும் நாவலை திரைப்படமாக கொண்டுவரும் போது விமர்சனங்கள் எழாமல் இருக்காது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான மூன்றே நாளில் வசூல் 200 கோடியை தாண்டி உள்ளது.
முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் ரூ25.86 கோடியாகவும், ஆந்திராவில் ரூ5.93 கோடியாகவும், கர்நாடகாவில் ரூ 5.04 கோடியாகவும், கேரளாவில் ரூ3.70 கோடி என முதல் நாள் வசூல் ரூ.80 கோடியை தாண்டிவிட்டது.
மேலும் அமெரிக்காவில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் இரு நாட்களில் 3 மில்லியன் டாலர்களை வசூலித்து குவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25.5 கோடி வரை வசூல் கிடைத்துள்ளது.
தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் வசூல் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படக்குழுவினர் மட்டுமில்லாது பொன்னியின் செல்வன் பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1955-ல் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு கோடையின்போது வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாவல்கள், சிறுகதைகள் போன்றவற்றை படிக்கும் ஆர்வமுள்ள ஒவ்வொரு தமிழரும் நிச்சயம் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலைப் படித்திருப்பார்கள். அதனைப் படிக்கத் தொடங்கி விட்டால் அதனை படித்து முடிக்கும் வரை நாம் அதற்கு அடிமையாகி விடுவோம். அந்த அளவிற்கு விறுவிறுப்பாக அந்த நாவல் நகரும்.
தற்போது அந்த பெரும் நாவல், நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு பிறகு தற்போது திரைப்படமாக வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இயக்குனர் மணிரத்தினத்திற்கும் நடிகர், நடிகைகளுக்கும் பிற கலைஞர்களுக்கும் பாராட்டுகள்.
இந்த திரைப்படம், இதுவரை பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படிக்காதவர்களின் மூளையில் கதையைப் பதிய வைத்து சாதனை படைத்திருக்கிறது; புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தூண்டியிருக்கிறது.
இதுவே பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சாதனை!