தேனி மாவட்டத்தில், ‘முதலமைச் சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ், மொத்தம் 906 பெண் குழந்தைகளுக்கு ரூ.2,26,55,400/- மதிப்பிலான வைப்புத் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பெண்சிசு கொலையினை தடுத்து, சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்திடும் உணர்வோடு, பெண் குழந்தைகளை பாதுகாத்திடவும், ஆண் குழந்தைகளை மட்டும் விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்திடவும், சிறு குடும்ப முறையை ஊக்குவிக்கவும், பெண் குழந்தைகள் பெற்றதனால் பொருளாதார பாதிப்பு என்ற பெற்றோர்களின் மனநிலையை போக்கிடவும், வறுமையில் வாழும் ஏழை தாய்மார்களின் பெண் குழந்தைகளுக்கு கல்வியை வழங்கிட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்து, ஆண் குழந்தை இல்லாதிருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் ஆரம்ப வைப்புத் தொகை ரூ.50,000/-மும், குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்து, ஆண் குழந்தை ஏதும் இல்லாதிருப்பின், ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000/-ம் வைப்புத் தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு, பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்ததும் திரளான வட்டி விகிதத்துடன் கூடிய, நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத்தொகையினை பயனாளிகளுக்கு வழங்கி, தமிழக அரசு வரலாற்று சாதனையை நிகழ்த்தி வருகிறது.
தேனி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் ‘முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ் 07.05.2021 முதல் தற்போது வரை ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 182 பெண் குழந்தைகளுக்கு ரூ.45,30,400/- மதிப்பிலான வைப்புத் தொகையும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 301 பெண் குழந்தைகளுக்கு ரூ.75,25,000/- மதிப்பிலான வைப்புத் தொகையும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 211 பெண் குழந்தைகளுக்கு ரூ.52,75,000/- மதிப்பிலான வைப்புத்தொகையும், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 212 பெண் குழந்தைகளுக்கு ரூ.53,25,000/- மதிப்பிலான வைப்புத்தொகையும் என மொத்தம் 906 பெண் குழந்தைகளுக்கு ரூ.2,26,55,400/- மதிப்பிலான வைப்புத் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
“எதிர்கால வாழ்வுக்கு வரப்பிரசாதம்”
‘முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ் பயனடைந்த கம்பம் நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் மனைவி செ.நாகசிஞ்சு தெரிவித்ததாவது:
கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். எங்களுக்கு விஸ்மயாஸ்ரீ, அனன்யாஸ்ரீ ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவரின் குறைந்த வருமானத்தை கொண்டு இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு, எதிர்கால வாழ்விற்கு என்னசெய்வது எண்ணிய நிலையில், ‘முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்’ குறித்து அறிந்தேன்.
அதன்பின்பு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் இத்திட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் நிதியுதவி வேண்டி விண்ணப்பித்தேன். விண்ணப்பத்தின் மீது அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டபின், இரண்டு பெண்களின் பெயரிலும் தலா ரூ.25,000/- வைப்புத் தொகைக்கான ஆணை வழங்கினார்கள்.
இதன்மூலம் எங்களது பெண் குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்விற்கு வரப்பிரசாதமாக வைப்புத்தொகை அமைந்துள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாத்திடும் பொருட்டு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிற முதல்வருக்கு குடும்பத்தினர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
“முதிர்வுத் தொகை பயனுள்ளதாக இருக்கும்”
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்து சதீஸ்குமார் மனைவி சின்னத்தாய் தெரிவித்ததாவது:
எங்களுக்கு எப்சியா, இவாஞ்சலின் ஆகிய பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் விவசாயக் கூலி வேலை செய்கிறார்.
குறைந்த வருமானம் குடும்ப செலவினங்களுக்கு சரியாக உள்ளது. இரண்டு பெண் குழந்தைகளை எவ்வாறு படிக்க வைப்பது, அவர்களின் எதிர்கால வாழ்விற்கு என்னசெய்வதென்று எண்ணிய நிலையில், தோழியின் மூலம் ‘முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம்’ குறித்து அறிந்த பின் விண்ணப்பித்தேன். இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25,000/- வைப்புத் தொகைக்கான ஆணையினை வழங்கினார்கள்.
இதன் மூலம் எனது இரண்டு பெண் குழந்தைகளின் 18 வயது நிறைவடைந்ததும் திரளான வட்டி விகிதத்துடன் கூடிய, நிலை வைப்புத்தொகையின் முதிர்வுத்தொகை அவர்களுக்கு கிடைக்கப்பெறும் போது அவர்களின் எதிர்கால வாழ்விற்கு பயனுள்ளதாக இருக்கும்.
பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களின் நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிற முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கலைஞர் காட்டிய வழியில் செயல்பட்டு வருகிற முதல்வர் பெண்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றத்திற்காகவும், பெண் கல்வியை ஊக்கப்படுத்திடவும் எண்ணற்ற பெண்கள் சார்ந்த திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்பதே தேனி மாவட்ட பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களின் எழுச்சிமிகு கருத்தாக இருக்கிறது.
தொகுப்பு:
சு.ஜெகவீரபாண்டியன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
அ.இளையேந்திரன்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
தேனி மாவட்டம்.