fbpx
Homeபிற செய்திகள்‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 375 பேருக்கு டெபிட் கார்டு, பெட்டகம்- ராமநாதபுரம் மாணவிகள் முதல்வருக்கு கனிவான...

‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 375 பேருக்கு டெபிட் கார்டு, பெட்டகம்- ராமநாதபுரம் மாணவிகள் முதல்வருக்கு கனிவான நன்றி

இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் மொத்தம் 375 மாணவிகள் டெபிட் கார்ட் மற்றும் ‘புதுமைப் பெண்’ பெட்டகத்தை பெற்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 5.9.2022 அன்று, சென்னையில் நடைபெற்ற விழாவில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

‘புதுமைப் பெண்’ திட்டம் மற்றும் 26 தகைசால் பலிகள், 15 மாதிரிப் பள்ளிகள் தொடக்க விழாவில் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை ‘சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை’ என மாற்றம் செய்துள்ளார்.

பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும் கல்வியறிவு தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக அடித்தளமாக ‘புதுமைப் பெண்’ என்னும் உன்னத திட்டத்தை, தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

யாருக்கு பொருந்தும்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று 9 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளாக இருத்தல் வேண்டும்.

மாணவிகள் 8 அல்லது 10 அல்லது 12-ம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

மருத்துவக் கல்விக்கும்
‘புதுமைப் பெண்’ திட்டத்தில், சான்றிதழ் படிப்பு(Certificate Course), பட்டயப் படிப்பு (Diploma/ITI./D.TEd.,Courses), இளங்கலைப் பட்டம்(Bachelor Degree B.A., B.Sc.,B.Com.,B.B.A . B.C.A., and all Arts & Science, Fine Arts Courses), தொழில் சார்ந்த படிப்பு(B.E.,B.Tech.,M.B.B.S.,B.D.S. B.Sc. ,(Agri.), B.V.Sc.,B.Fsc.,B.L,, etc.,) மற்றும் மெடிக்கல் படிப்பு Nursing, Pharmacy,Medical Lab Technology, Physiotherapy etc.,) போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும் இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப் பொறுத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக் கல்வியைப் பொறுத்தமட்டில், நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர்.

முதற்கட்டமாக 67,000 கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில் சென்னையில் 2,500 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய ‘புதுமைப் பெண்’ பெட்டகப்பை, வங்கி பற்று அட்டை (Debit Card) ஆகியவற்றை வழங்கினர்.

இராமநாதபுரத்தில்
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் 05.09.2022 அன்று ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/ வழங்கும் திட்ட துவக்க விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மாணவிகளுக்கு டெபிட் கார்ட், ‘புதுமைப் பெண்’ பெட்டகத்தை வழங்கினார்.

கடலாடி, அரசு கலை, அறிவியல் கல்லூரி 29 மாணவிகளும், இராமநாதபுரம், அரசு பெண்கள் கலை கல்லூரி 94 மாணவிகளும், பரமக்குடி அரசு கலைக்கல்லூரி 75 மாணவிகளும், இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி 9 மாணவிகளும், இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி 13 மாணவிகளும், கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி 4 மாணவிகளும், இராமநாதபுரம் முகமது சதக் ஹமீது பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி 30 மாணவிகளும், இராமநாதபுரம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பெண்கள் கலைக்கல்லூரி 14 மாணவிகளும், இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி 26 மாணவிகளும், முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை, அறிவியல் கல்லூரி 13 மாணவிகளும், இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி 55 மாணவிகளும், இராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி 3 மாணவிகளும், இராமநாதபுரம் வேலு மனோகரன் பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி 10 மாணவிகளும் என மொத்தம் 375 மாணவிகள் பெற்றனர்.

“பேருதவியாக இருக்கும்”
‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்ற ரம்யா த/பெ.கருப்பையா தெரிவித்ததாவது: முகமது சதக் ஹமீது கலை, அறிவியல் கல்லூரியில் படிக்கிறேன். படிப்பு தொடர்பான அத்தியாவசிய தேவைகளுக்கு பெற்றோர் பணம் வழங்கி வந்தார்கள்.

தற்போது முதல்வர் ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவிகளின் கல்லூரி கனவை நனவாக்கும் வகையில், ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெறும் திட்டத்தை துவக்கி வைத்து, இந்த மாதமே எனது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி படிப்பு முடிக்க இத்தொகை மிகவும் பேருதவியாக இருக்கும். இத்திட்டத்தை துவக்கி வைத்த முதல்வருக்கு கிராமப்புற மாணவிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“பயனுள்ளதாக இருக்கிறது”
‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்ற அபு சுமையா த/பெ.சீனி முகமது தெரிவித்ததாவது: நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். முதல்வர் அளித்த இந்த பெண் கல்வி உதவித்தொகை (புதுமைப் பெண்) திட்டம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இத்திட்டம் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. குடும்பத்தின் சார்பாக முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எத்தனையோ பெண்கள் படிக்க வழியில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கும் புதுமைப் பெண் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
கல்வி என்னும் நிரந்தர சொத்தினை பெண்கள் அனைவரும் பெற்றிட வேண்டும் என்ற பெண்ணுரிமை கொள்கையின் மறு உருவமாகவும், பெண் சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வலிமையான பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையவும் இப் ‘புதுமைப் பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தொகுப்பு:
லெ.பாண்டி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
வா.பெ.வினோத்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
இராமநாதபுரம்.

படிக்க வேண்டும்

spot_img