fbpx
Homeதலையங்கம்பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவது எப்போது?

பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவது எப்போது?

விருதுநகரில் இளமபெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ பதிவு செய்து, நண்பர்களுக்கு பகிர்ந்ததோடு 8 பேர் சேர்ந்து அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்.

இந்த கொடுங்குற்றத்தை பல நாட்கள் தொடர்ந்து அரங்கேற்றி வந்திருக்கிறார்கள். இந்தச் செய்தியைக் கேட்டு நெஞ்சத்தில் ரத்தக்கண்ணீர் பீறிடுகிறது. கல்விக் கண் திறந்த காமராசர் பிறந்த ஊரிலா இது நிகழ வேண்டும்?

காதலனாக நடித்த ஹரிஹரன் உள்ளிட்ட 8 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த லட்சணத்தில், அவர்களில் 4 பேர் பள்ளி மாணவர்களாம். என்னே கொடுமை?. இந்த சம்பவம் முன்பு டெல்லியில் நடந்த நிர்பயா கொடூரத்தையும் பொள்ளாச்சியில் நடந்த அருவறுக்கத்தக்க நிகழ்வையும் நம் கண்முன்னே நிறுத்துகிறது.

இதற்கு ஒரே ஒரு ஆறுதலாக இருப்பது, முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு ஆணையிட்டு மின்னல்வேக நடவடிக்கை மேற்கொண்டது தான்.

மேலும் சட்டமன்றத்தில் பேசிய அவர், விருதுநகர் பாலியல் வன்கொடுமை குறித்து சிபி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல கையாளாமல் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

பாலியல் குற்றவாளிகளை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தாலும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என நீதிமன்றங்கள் தண்டித்தாலும் இம்மாதிரி குற்றங்கள் தினசரி நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

இப்போதிருக்கும் போக்சோ சட்டம் கூட போதாது. சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதையே நிகழும் அதிக பாலியல் குற்றங்கள் அறிவுறுத்துகின்றன.

பெண்களுக்கு குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முடிவு கட்டுவது அல்லது குற்றங்களை கணிசமாகக் குறைப்பதற்கான வழிமுறைகளை சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய, மாநில அரசுகள் பல கோணங்களிலும் பரிசீலனை செய்து பரிகாரம் தேட வேண்டும். அதோடு இதனைச் சமூகக் கண்ணோட்டத்திலும் அணுகி, இளம்பெண்களிடமும் பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். இது தீவிரப் பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

படிக்க வேண்டும்

spot_img