fbpx
Homeபிற செய்திகள்படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக மாற்றம் 23 பேருக்கு திட்ட மதிப்பீடாக ரூ.11.15...

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக மாற்றம் 23 பேருக்கு திட்ட மதிப்பீடாக ரூ.11.15 கோடி, மானியம் ரூ.2.32 கோடி

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்” (UYEGP) என்ற திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 112 பயனாளிகளுக்கு, திட்ட மதிப்பீடாக ரூ.4.21 கோடி கடனுதவியும், மானியத் தொகையாக ரூ.1.05 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதுவரை, 23 தொழில் முனைவோர்களுக்கு, திட்ட மதிப்பீடாக ரூ.11.15 கோடியும், மானியத் தொகையாக ரூ.2.32 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

எழுந்து நடந்தால், இமய மலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால் சிலந்திவலையும் நம்மை சிறைப் பிடிக்கும் என்பதை உணர்ந்து, அதற்கேற்ற தன்னம்பிக்கையுடன் நீங்கள் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்ற பொன்மொழிக்கேற்ப, முதல்வர் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சியளித்து, அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில், திட்டங்களை தீட்டி, இளைஞர் சமுதாயத்திற்கு பெரும் தன்னம்பிக்கையை அளித்து, அவர்களது வாழ்வை ஒளிமயமாக்கினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை மாவட்ட தொழில் மையம் மூலம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
ரூ.73 கோடி முதலீடு

கடந்த 7.3.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 73 கோடி ரூபாய் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 5 நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

இந்த முதலீடுகள் வாயிலாக பல்வேறு துறையின் கீழ் மீன் பதப்படுத்துதல், சாக்குப் பைகள் தயாரித்தல், உலர் சாம்பல் செங்கல்கள் தயாரித்தல் முதலிய தொழில்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இத்திட்டங்கள் குறித்து, மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு, தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையம் மூலம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்(UYEGP), புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS ஆகிய திட்டங்களை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

திட்ட மதிப்பீடு தொகை உயர்வு
புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS) இத்திட்டத்தில், திட்டமதிப்பீட்டுத் தொகையை 5 கோடியாக உயர்த்தி தமிழக அரசுஆணையிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற பிளஸ் 2 தேர்ச்சி, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் தொழில் பயிற்சி ஆகிய கல்வி தகுதி பெற்றிருப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம், தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விரும்பும் மாவட்டத்தில் தொழில் துவங்கலாம்
இத்திட்டத்தில் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் வசித்து வந்தாலும் அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் தொழில் தொடங்கலாம். இதற்கான, வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21-க்கு மேல் 35-க்குள் இருத்தல் வேண்டும்.

சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற, ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை. இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு ரூ.10 இலட்சத்திற்கு மேல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரையிலான உற்பத்தி சார்ந்த தொழில்கள், சேவை சார்ந்த தொழில்கள் துவங்கலாம். பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்காக முதலீடு செய்ய வேண்டும்.

முதலீட்டு மானியம்
இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு தொழிலின் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 இலட்சம் வரை முதலீட்டு மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.

ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் 15 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். கூட்டு நிறுவனமாக பதிவு செய்தால் அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பங்குதாரர்களாக இருந்தால் யாராவது ஒருவருக்கு மட்டும் பயிற்சி வழங்கப்படும்.

பெண்களுக்கு 50 சதவீதம்
சிறப்பு பிரிவினரான பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வு குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் www.msmetamilnadu.tn.gov.in/needs http://www.msmetamilnadu.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அவர்களது விண்ணப்பம் மாவட்ட தொழில் மையம் மூலம் இணையதளத்தில் சரிபார்க்கப்பட்டு நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்க ப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு இதுவரை, 2021–&2022-ம் நிதியாண்டில், 23 தொழில் முனை வோர்களுக்கு, திட்ட மதிப்பீடாக ரூ.11.15 கோடியும், மானியத் தொகையாக ரூ.2.32 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
கடனுதவி திட்டங்கள்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையம் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அவற்றுள் “படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்” (UYEGP2010-2011-ம் ஆண்டு முதல் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வங்கிக்கடன் மற்றும் மானியத் தொகையின் அளவை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ.15 இலட்சமும், சேவை தொழிலுக்கு 5 இலட்சமும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 இலட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.

இவை அனைத்திற்கும் அரசு மானியமாக திட்ட முதலீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2.50 இலட்சம்) வழங்கப்படுகிறது. மேலும் குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு தற்போது 5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்

இத்திட்டத்தில், குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 35 ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 45 ஆகவும் (பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்¬ மயினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, 2021-2022-ம் நிதியாண்டில் 112 பயனாளிகளுக்கு, திட்ட மதிப்பீடாக ரூ.4.21 கோடி கடனுதவியும், மானியத் தொகையாக ரூ.1.05 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

என்னென்ன தேவை
இத்திட்டத்தில் கடன்பெற விரும்பும் இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை இல்லாதவர்கள் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இயந்திரத்திற்கான விலைப்புள்ளி, ஆகிய ஆவணங்களுடன் www.msmetamilnadu.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக் கலாம். இத்திட்டங்களை இளைஞர் கள் பயன்படுத்தி, எதிர்கால தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும்,
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.
“வேலையில்லாத பட்டதாரிகளுக்கு பணி வழங்கும் உயரம் அடைந்தேன்”

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பயனடைந்த திருநெல்வேலி கே.டி.சி. நகர், பிருந்தாவன் நகர், ச. இசக்கிமுத்து தெரிவித்ததாவது:

பி.இ.(இயந்திரவியல்) படித்துள்ளேன். வெளிநாட்டில் கனரக தொழிற்சாலையில் சுமார் 3 வருட காலம் கஷ்டப்பட்டு கனரக வாகனங்கள் வீல் அலைன்மென்ட் மற்றும் பழுதுநீக்கம் வேலை பார்த்து வந்தேன். அங்கு என்னுடைய தேவையை பூர்த்தி செய்த பின்னர் போதிய சேமிப்பு செய்ய வழி இல்லை.

எனவே, எனது சொந்த மாவட்டத்தில் குடும்பத்துடன் சேர்ந்து சுயதொழில் தொடங்கி அதன் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் வெளிநாட்டில் நான் செய்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு இங்கு தொழில் தொடங்க வந்தேன்.

எனது நண்பர் ஒருவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் சென்று சுயதொழில் தொடங்குவதை பற்றி விசாரித்தேன். அவர், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசின் மாவட்ட தொழில் மையம் சுய தொழில் தொடங்க கடன் வழங்கும் திட்டத்தை பற்றி தெரிவித்தார்.

அதனடிப்படையில் நான் மாவட்ட தொழில் மையத்திற்கு நேரில் சென்று, விவரங்களை கேட்டறிந்து அதில், கனரக வாகனங்கள் வீல் அலைன்மென்ட் மற்றும் பழுதுநீக்கம் செய்வதற்காக இணையதளத்தில் விண்ணப்பம் செய்தேன்.

மாவட்ட தொழில் மையத்தினர் என் விண்ணப்பத்தினை பரிசீலித்து, எனக்கு இந்தியன் வங்கி மூலம் புதிய தொழில் முனைவோர்க்கான திட்ட மதிப்பீட்டு கடனுதவியாக ரூ.35.28 இலட்சமும், அதற்கான அரசு மானியமாக ரூ.11.75 இலட்சமுமாக,மொத்தம் ரூ.47.03 இலட்சம் வழங்கினார்கள்.

இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரியில் கனரக தொழிலை துவங்கியதால், என்னுடைய பொருளாதாரமும், எனது வாழ்வாதாரமும் முன்னேற்றமடைந்துள்ளது. என் போன்ற வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் அளவிற்கு என்னுடைய தரத்தை உயர்த்தி கொண்டேன்.

இதனால், தற்போது என்னுடைய தொழிற்சாலையில் 10 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களது வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய, நான் ஊன்றுகோலாக இருக்கிறேன் என்பதை நினைத்து, மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.

எனக்கு இந்த நல்ல வாய்ப்பை அளித்து, என்னுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திய மாவட்ட தொழில் மையத்திற்கும், இத்தகைய சீர்மிகு திட்டத்தினை அளித்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

படிப்புக்கு கிடைத்தது மரியாதை: தொழிலுக்கு வந்தது வருமானம்
புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பயனடைந்த தூத்துக்குடி சங்கரப்பேரி மார்ட்டினா நகரைச் சேர்ந்த ச.ராஜேஷ் தெரிவித்ததாவது:

பி.ஏ. (பொருளாதாரம்) படித்துள்ளேன். எனது குடும்பம் மிகவும் பின்தங்கிய குடும்பம். குடும்பத்தின் கஷ்டத்தினை போக்க சென்னையில் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தேன்.

ஆனால் அங்கு நான் படித்த படிப்பிற்கும், பார்த்த வேலைக்கும் போதிய வருமானமும் இல்லை. மன நிம்மதியும் இல்லை. இதுபோக நான் பகுதி நேர வேலை பார்த்தும் எனது குடும்பத்தின் கஷ்டத்தினை போக்க முடியவில்லை.

எனவே நான் படித்த படிப்பு வீணாகிவிடுமோ என்றும் வேலையை விட்டு எங்கோ சென்றுவிடலாம் என்று நண்பரிடம் புலம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில், மாவட்ட தொழில் மையம் மூலம் சுய தொழில் தொடங்குவது குறித்து என்னிடம் விளக்கி கூறினர். அதன் வாயிலாக, மாவட்ட தொழில் மையத்தினை அணுகி இதை பற்றி தெளிவான விவரங்களை கேட்டறிந்தேன்.

எனவே, இத்தொழிலை செய்ய, ஆலோசித்து மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்தேன். அவர்கள் என்னுடைய விண்ணப்பத்தை பரிசீலித்து, எனக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் புதிய தொழில் முனைவோருக்கான திட்ட மதிப்பீட்டு கடனாக ரூ.31.03 இலட்சமும்,அரசு மானியமாக ரூ.10.09 இலட்சமும் ஆக மொத்தம் ரூ.41.12 இலட்சம் வழங்கினார்கள்.

இத்தொகையை கொண்டு என்னுடைய பகுதியில் ஸ்டீல் லேசர் கட்டிங் சிறிய ஆலையை துவங்கினேன். இதன் மூலம், என்னுடைய படிப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் என்னுடைய தொழிலில் அதிக வருவாய் ஈட்டினேன்.

எனது பகுதியிலுள்ள 4 இளைஞர்களுக்கு பணி வழங்கி அவர்களுடைய வாழ்வாதாரத்தையும், பொருளாதார தேவைகளையும் பூர்த்தி செய்ய நான் ஓர் ஊன்றுகோலாக இருப்பதற்கான வாய்ப்பு வழங்கிய, மாவட்ட தொழில் மையத்திற்கும், இத்தகைய சீர்மிகு திட்டத்தினை அளித்த முதல்வருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

படித்தும், தகுந்த வேலையில்லாமல் இருக்கின்ற தகுதியான இளைஞர்கள், தங்களுடைய படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும் வரை, காலம் தாழ்த்தாமல், அரசின் உதவியுடன் சுய தொழில் துவங்கி, வாழ்க்கையில் முன்னேற, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், புறவழிச்சாலை அருகில் கல்லூரி நகர் தூத்துக்குடி என்ற முகவரியில் அணுகி தொழில் துவங்குவதற்கான விபரங்களை கேட்டறிந்து புதிய தொழில் முனைவோர்களாக தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதே அரசின் விருப்பம்.

தொகுப்பு:
சு.ஜெகவீரபாண்டியன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
எஸ். செல்வலெட் சுஷ்மா,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
தூத்துக்குடி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img