கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி 5 சிறுமிகள் உள்பட 7 பேர் பலியான செய்தி நெஞ்சை பிளக்க வைக்கிறது.
கடலூர் மாவட்டம் பன்ருட்டி வட்டம் குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் மகள் நவநீதா, அவரது உறவினரும், குணால் மனைவியுமான ஹரிபிரியா இவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்திருந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த உறவினரான ராஜகுரு மகள்கள் பிரியதர்ஷினி, திவ்யதர்ஷினி ஆகியோருடன் கெடிலம் ஆற்றில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி ஆற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டது. இதற்காக ஆற்றின் மையப்பகுதியில் மணல் அள்ளப்பட்டதால் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.
இந்நிலையில், ஆற்றில் இறங்கிய போது பிரியதர்ஷினி, திவ்யதர்ஷினி இருவரும் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கியதாக கூறப்படுகிறது. அவர்களைக் காப்பாற்ற முயன்ற நவநீதா, ஹரிப்பிரியாவும் சேற்றில் சிக்கினர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிறுமிகளான சுமதா, மோனிஷா, சங்கவி ஆகியோரும் ஆற்றில் இறங்கி காப்பாற்ற முயன்ற போது அவர்களும் சேற்றில் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் கிராமமக்கள் ஆற்றில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒருவர் பின் ஒருவராக 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் 7 பேரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் கிராமமக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். உயிரிழந்தவர்களில் ஹரிப்பிரியாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் ஆனது.
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து உயிரிழந்தவர்களின் சடலத்தை பார்வையிட்டு அவர்களது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தடுப்பணை கட்ட தோண்டப்பட்ட பள்ளங்கள் நிரப்பபடாததுதான் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அது சரியே.