மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், தமிழகத்துக்கு தேசிய அளவில் 30 வது இடம்தான் கிடைத்துள்ளது.
மதுரையை சேர்ந்த திரிதேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 30 வது இடத்தையும் பிடித்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக எம்.ஹரிணி என்ற மாணவி 702 மதிப்பெண்களுடன் 43வது இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, ஆங்கிலம், மராத்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.
நிகழாண்டு தேர்வில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளில் 32 ஆயிரம் பேர் தமிழில் தேர்வு எழுதினர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை சுமார் 62% அதிகமாகும்.
தமிழகத்தில் மொத்தம் 1,32,167 மாணவர்கள் தேர்வெழுதி இருந்த நிலையில் 67,789 (51.2%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுவே கடந்த ஆண்டு, நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.4 சதவீதமாக இருந்தது.
தமிழகத்தில் நீட் எதிர்ப்பு மனநிலை இருந்தாலும், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோய் விடக் கூடாது என்ற எண்ணத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அரசின் வழிகாட்டுதலுடன் நீட் தேர்வு எழுதி வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டு 17 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 80 சதவீதம் பேர் தோல்வியை தழுவியுள்ளனர்.
இதற்கிடையில் நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையும் முன்பை விட குறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. இது தமிழத்திற்கு ஷாக் தரும் செய்தியாகும்.
நடப்பாண்டு பெரிதும் பின்னடைவை சந்தித்திருப்பது அரசு பள்ளி மாணவர்கள் தான். ஏனெனில் ரிப்பீட்டர்கள் எனப்படும் 2வது, 3வது முறை தேர்வு எழுதியவர்கள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிகிறது.
அவர்கள் அனைவரும் பணம் படைத்தவர்கள், வசதி வாய்ப்பு பெற்றவர்கள். அத்தகைய சூழல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இல்லை. எனவே 7.5 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே ஆறுதலாய் இருக்கும் நிலையில், அதனை அதிகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.
நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சதவீதம் குறைந்ததற்கு கொரோனா பாதிப்பால் நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெறாதது, உயிரியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கடினமான கேள்விகள் போன்ற சில காரணங்களை கல்வியாளர்கள் அடுக்கினாலும் மருத்துவக் கல்வி பயில நீட் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று ஆகிவிட்ட சூழலில், அரசு அதற்குத் தேவையான பயிற்சி, வழிகாட்டலை முறைப்படுத்துவது முக்கியம் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கை. அதற்கான சட்டப்போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக செயல்படுகின்றன.
நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா, எப்போது கிடைக்கும் அல்லது கிடைக்காதா? என்பது பெரும் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. கிடைக்கும் போது கிடைக்கட்டும். அதுவரை நீட் தேர்வை எதிர்கொள்ளத் தான் வேண்டும்.
அதற்கான முயற்சியில் முழுமையாக மாணவ, மாணவிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நிர்ணயிக்கப்பட்ட தலைவிதி!