சேலம் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் நடப்பாண்டில் சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி, எர்ணாபுரம் கிராமத்தில் பொன்னியாறு குறுக்கே ரூ.1.16 கோடியில் தடுப்பணை கட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
இத்தடுப்பணை மூலம் 185 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. எடப்பாடி வட்டம், பக்கநாடு கிராமம், அதுவாபட்டி அருகில் கருமத்தான்கிணறு ஓடையின் குறுக்கே ரூ.47.32 இலட்சத்திற்கு தடுப்பணை கட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பணை மூலம் 10 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
“நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர் மேலாண்மையை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக அணைகள், அணைக்கட்டுகள், தடுப்பணைகள், கதவணைகள், ஏரிகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றை உருவாக்குதல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல், மாநிலத்திற்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே பாயும் நதியை இணைத்தல் போன்ற பல்வேறு பணிகளை நீர்வளத்துறையின் மூலம் மேற்கொண்டு வருகிறார்.
செயற்கை முறையில் நிலத்தடி நீரை செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தி, நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று, அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர்வாருதல் மற்றும் நீர்த்தேக்கங்கள் மற்றும் கண்மாய்களின் சேமிப்பு திறன்களை அதிகரித்திடவும் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்ததாவது:
நீர் மேலாண்மையில் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சேலம் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் நடப்பாண்டில் சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி, எர்ணாபுரம் கிராமத்தில் பொன்னியாறு குறுக்கே தடுப்பணை கட்டும் பணிக்கு ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பணை மூலம் 185 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.
எடப்பாடி வட்டம், பக்கநாடு கிராமம், அதுவாபட்டி அருகில் கருமத்தான்கிணறு ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிக்கு ரூ.47.32 இலட்சத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பணை மூலம் 10 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சரபங்கா குறுக்கே தடுப்பணை
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் ஓமலூர் கிராமத்தில் உள்ள சரபங்கா ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிக்கு ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணி விரைவில் துவங்கப்பட உள்ளது.
இத்தடுப்பணை செயல்படுத்தப்படுவதால், ஓமலூர் மற்றும் பச்சனம்பட்டி கிராமத்தில் உள்ள 227 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், 74 கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுவேதா நதியின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, தொழில்நுட்ப ஒப்புதலுக்காக நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் பணி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்தடுப்பணை செயல்படுத்தப்படுவதால் 131 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கெங்கவல்லி கிராமம், கணவாய்காடு அருகே சுவேதா நதியின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, தொழில்நுட்ப ஒப்புதலுக்காக மதிப்பீடு அனுப்பப்பட உள்ளது. ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் பணி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்தடுப்பணை செயல்படுத்தப்படுவதால் 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.
சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களால் மாவட்டத்தில் கடந்த மே 2012-ல் இருந்த நிலத்தடி நீர்மட்டத்தை ஒப்பிடும்போது தற்போது, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் திறந்தவெளி கிணறுகளில் 9.84 அடி அளவிற்கும் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் 14.36 அடி அளவிற்கும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
இதனால் குடிநீர் தேவை மற்றும் விவசாய பணிகளுக்கு போதியளவில் நீர் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்தார்.
கோடையிலும் செழுமையாக காட்சி தரும் கிணற்று நீர்
பொன்னி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் மூலம் பயனடைந்த சேலம் மாவட்டம், எர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி எம்.ரமேஷ் (வயது 37) தெரிவித்ததாவது:
என் தந்தை பெயர் வி.முத்துசாமி. மகுடஞ்சாவடி, எர்ணாபுரத்தில் உள்ள தட்ட புளியான் காட்டில் விவசாயம் செய்து வருகிறேன். எனக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. எனக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் பசுமையாக தெரியும் எங்களது பகுதி மழைக்காலம் முடிந்த சில நாள்களிலேயே வறண்ட பகுதியாக மாறிவிடும்.
இதனால் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்ய இயலாத சூழ்நிலை நிலவி வந்தது. மேலும் விவசாய பயிர்களை முழுமையாக அறுவடை செய்யும் வகையில் எப்போதும் நிலத்தடி நீர் கை கொடுத்தது இல்லை. இதற்கு ஒரு தீர்வாக பொன்னி ஆற்றின் குறுக்கே எர்ணாபுரம் கிராமத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வந்தது.
விவசாயிகளின் கோரிக்கை களுக்கு உடனடியாக மதிப்பளித்து தமிழக முதல்வர் பொன்னி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆணையிட்டு, தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் பெய்த மழை நீரானது புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் காரணமாக தேங்கி நிற்கிறது. கோடைகாலத்தில் எப்போதும் வற்றிவிடும் எங்களது கிணறு, தற்போது தண்ணீர் நிறைந்து செழுமையாக காட்சி அளிக்கிறது.
பல வருடங்களுக்குப் பிறகு தற்போது கோடை காலமான இப்பருவத்தில் நெல் பயிரிட்டு இன்னும் சில நாட்களில் அறுவடை செய்யும் நிலையில் தயாராக உள்ளது. தடுப்பணை கட்டப்பட்டதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் தற்போது வெகுவாக உயர்ந்துள்ளதால், எனது கிணறு மட்டும் அல்லாமல் இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளின் கிணறுகளிலும் தண்ணீர் உள்ளது.
விவசாயமே நாட்டின் முதுகெலும்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முதல்வரின் பொன்னான ஆட்சி நடைபெற்று வருகிறது. என்னைப் போன்ற ஏழை விவசாயிகளின் சிறு கோரிக்கைகளுக்கும் செவி மடுக்கும் முதல்வர் கிடைத்திருப்பது நாங்கள் செய்த பாக்கியம்.
எங்களது வறண்ட பூமியை செழிப்பாக மாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என் குடும்பத்தின் சார்பாகவும், எங்களது பகுதி விவசாயிகளின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இனிமேல் இல்லை வறண்ட பூமியாக மாறும் நிலை
பொன்னி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் மூலம் பயனடைந்த சேலம் மாவட்டம், பட்டனாம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆர்.பாலன் (வயது 56) தெரிவித்ததாவது:
சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், புது£ர் ஊராட்சி பட்டனாம்பட்டியில் விவசாயம் செய்து வருகிறேன். எனக்கு சொந்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. எனது மகள், மகன் இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக நாங்கள் விவசாய நிலங்களை விட்டுவிட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எப்போதுமே வறண்ட பூமியாக காட்சியளிக்கும் எங்களது பகுதியில் மழை பெய்யும் சில காலங்களில் மட்டுமே ஏதேனும் விவசாயம் செய்ய முடியும்.
பொன்னி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
எங்களது கோரிக்கையினை நிறைவேற்றும்விதமாக தற்போது பொன்னி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையால் எங்களது கிணற்றில் கோடை காலத்திலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. எனது தோட்டத்தில் நெல் பயிரிட்டுள்ளேன்.
நெல் அறுவடைக்குப் பின் நிலக்கடலை பயிரிடலாம் என எண்ணி உள்ளேன். புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பணையால், நான் மட்டும் அல்ல, எங்களது சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன் பெற்றுள்ளோம்.
கோடை காலத்தில் வறண்ட பூமியாக மாறும் நிலை இனிமேல் இல்லை என்ற நிலையை முதல்வர் எங்களுக்கு உருவாக்கி தந்துள்ளார். என்னைப் போன்ற சிறு விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் உன்னத நோக்கத்துடன் முதல்வர், விவசாயத்திற்கு என தனி நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
விவசாயம் மற்றும் விவசாயிக்கு வாழ்வளிக்கும் உன்னத தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருக்கு விவசாயிகளின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், தமிழகத்தின் நீர்வளத்தின் திறன்மிகு வளர்ச்சிக்கும், அதனை திறம்பட மேலாண்மை செய்வதற்கும், மாநிலத்தின் அனைத்து நீர்தேவைகளிலும் தன்னிறைவு அடையும் நோக்கோடும் ஒரு தனித் துறையை உருவாக்கி தொலைநோக்கு பார்வையுடன் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் நீர்மேலாண்மையில் இந்தியாவிற்கே தமிழகம் எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.
தொகுப்பு:
ச.சுவாமிநாதன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
சேலம் மாவட்டம்.