ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசதுரோக சட்டம், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 124ஏ-ன் கீழ் கடந்த 152 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
பிரிட்டிஷ் ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீதுதான் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. மூன்று முறை இந்த சட்டத்தின் கீழ் பால கங்காதர திலகர் கைதானார். 18 மாதங்கள் சிறையில் இருந்தார்.
1922 ம் ஆண்டு காந்தியின் ‘யங் இந்தியா’ பத்திரிக்கை மீதும் இந்த சட்டம் பாய்ந்தது. இந்த தேசத்துரோக வழக்கில்தான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கைதாகி சிறையில் வைக்கப்பட்டார்.
பா.ஜ.க. ஆட்சியிலும் அவர்களது கட்சிக்கு எதிரான சிந்தனையாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். 2019ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் 10 ஆயிரம் பழங்குடியினர் மீது இந்த வழக்கு பாய்ந்தது.
மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராடியதற்காக அவர்கள் மீது இந்த வழக்கு போடப்பட்டது. 2014 முதல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் 179 பேர் மீது இந்த வழக்கு போடப்பட்ட தாகவும் இதில் 70 சதவிகித வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடிய 9 ஆயிரம் பேர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது.
நாட்டைக் காட்டிக் கொடுப்பது, சதி செய்வது, அந்நிய நாட்டுக்கு தகவல் சொல்வது தேசத் துரோகமாகக் கருதப்படலாம். ஆனால் ஒரு அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது எப்படி தேசத் துரோகம் ஆகும்?
இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், இன்னும் இந்த சட்டம் தேவைதானா என ஒன்றிய அரசிடம் உச்ச நீதிமன்றம் இப்போது கேள்வி எழுப்பி உள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசு முடிவெடுக்கும் வரை சட்டப்பிரிவு 124ஏ&ன் கீழ் எந்தவொரு வழக்கையும் பதிவு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மத்திய அரசு மதிப்பதாகக் கூறியதோடு, அதேநேரத்தில், லட்சுமண ரேகை அனைவராலும் மதிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்தார்.
அதாவது, உச்சநீதிமன்றம் தனது வரம்பை மீறி செயல்படக் கூடாது என்பதை இதன்மூலம் அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார். அவரது இந்த கருத்தால், உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு விஷயத்தில் ஒன்றிய அரசு அதிருப்தி அடைந்திருப்பது வெளிப்பட்டுள்ளது.
ஒன்றிய அமைச்சரின் லட்சுமணன் கோடு பேச்சு, உச்சநீதிமன்றத்தைச் சீண்டிப்பார்ப்பதாக அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்படுகிறது.
அப்படியானால் அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் சட்டங்களை இயற்ற முடியுமா? என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தேசத் துரோக சட்டப் பிரிவு 124-ஏ-வை ஒன்றிய அரசு நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பதை ஜனநாயகவாதிகள் அனைவரும் வரவேற்பார்கள் என்பது உறுதி.
ஒன்றிய அரசு தனக்கு அளிக்கப்பட்டு இருக்கும் காலஅவகாசத்தில் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்து நல்லதொரு முடிவை எடுக்கும் என்றே நாட்டு மக்கள்
நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
உச்சநீதிமன்றமும் காத்திருக்கிறது!