Homeபிற செய்திகள்தூக்கநாயக்கன்பாளையம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சித் திட்டப்பணிகள்- ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு

தூக்கநாயக்கன்பாளையம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சித் திட்டப்பணிகள்- ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு

ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் மற்றும் கோபி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி, பெரிய கொடிவேரி, அளுக்குளி, லக்கம்பட்டி, சிறுவலூர், நாதிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்தியாளர் பயணத்தின்போது சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி ஊராட்சி கள்ளிப் பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கடந்த மாதம் முதல் செயல்படும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

இங்கு நடைபெற்றுவரும் பணியினை பார்வையிட்டு, நாளது தேதியில் கொள் முதல் செய்யப்படும் நெல்லின் விவரம், டோக்கன் பதிவு மற்றும் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இப்பகுதியில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெல்லின் விவரத்தையும் கேட்டறிந்தார். அவற்றை விரைவாக கொள்முதல் செய்ய அறிவுறுத்தினார்.
தினசரி அடிப்படையில் விதிகளுக்கு உட்பட்டு 1000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை உடனுக்குடன் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சிறப்பாக செயல்படுவதாகவும், நெல்லினை உடனுக்குடன் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம், பெருமுகை ஊராட்சி சைபன் புதூரில் கழனி உற்பத்தியாளர் கள் குழு நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சொட்டு நீர்ப்பாசன அலகினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

கண்க்கம்பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வடகள்ளிப்பட்டி நியாயவிலைக் கடையில் ஆய்வு நடத்தினார்.

அங்கிருந்த விற்பனையாளரிடம் பயோ மெட் இல்லாதவர்கள் எத்தனை பேர், ஸ்டாக் எங்கிருந்து வருகிறது எனக் கேட்டறிந்து, காதிப் பொருட்களான மங்களம் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டார்.

பெரியகொடிவேரி
கோபிசெட்டிபாளையம் வட்டம், பெரியகொடிவேரியில் ரூ.7.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனக் கட்டிடம், மாணவர் தங்கும் விடுதி மற்றும் தாங்கு சுவர் கட்டும் பணி, ரூ.4.28 லட்சம் மதிப்பீட்டில் தொழில் மையம் 4.0 நவீன தரத்திற்கு உயர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அமைக்கும் தொழில்நுட்ப மையங்களாக மாற்றி அமைக்க உள்ள பணியினையும் பார்வையிட்டார்.

பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
அளுக்குளி ஊராட்சி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற வேளாண்மையில் இணையவழி தொழில்நுட்ப பயன்பாடு பற்றிய பயிற்சி துவக்க விழாவில், வேளாண் இடுபொருட்கள் விற்பனையாளர்களுக்கான பட்டயக் கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 3200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கோபிக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஆய்வு செய்தார்.

ரூ.63.40 லட்சத்தில் வளம் மீட்பு பூங்கா
லக்கம்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.63.40 லட்சம் மதிப்பீட்டில் வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரித்தல், மரபுக் கழிவுகள் மறுசுழற்சி செய்தல் பணிகள், நாதிபாளையம் ஊராட்சியில் உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் மரச்செக்கில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தயாரிக்கப்படுவதையும் பார்வையிட்டார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் நூலகம் அமைக்க மனு அளித்தனர். அவர்களிடம் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக ஆட்சியர் பதில் அளித்தார்.

சிறுவலூரில் 15-வது நிதிக்கு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.49.98 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையினை சீரமைக்கும்படியும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று மருத்துவர்களுடன் என்னென்ன பிரிவுகள் ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு மாற்றம் செய்யப்படுவது குறித்து கேட்டறிந்தார்.

தொற்றா நோய் பிரிவு, கர்ப்பிணிகள் அவசர கால பிரிவு, ஆய்வகங்கள், கண் பரிசோதனை பிரிவு மருந்தகம் ஆகியவற்றைப் பார்வையிட்டார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

சிறுவலூர் ஊராட்சி கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டத்தின் கீழ் ரூ.5.32 லட்சம் மதிப்பீட்டில் இருப்பு அறையுடன் கூடிய சமையலறைக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.15.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பால் கூட்டுறவு சங்க கட்டிடத்தினையும் ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வுகளின்போது, மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஈரோடு முருகேசன், லக்கம்பட்டி பேரூராட்சி தலைவர் அன்னகொடி, செயல் அலுவலர் சண்முகம், சிறுவலூர் ஊராட்சித் தலைவர் வனிதாவேலுசாமி, கோபிசெட்டிபாளையம் மற்றும் டி.என்.பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img