fbpx
Homeதலையங்கம்தலைக்கவசம் அணிவதில் அலட்சியம் வேண்டாம்!

தலைக்கவசம் அணிவதில் அலட்சியம் வேண்டாம்!

மோட்டார் வாகன சட்டம் 1988&ன் பிரிவு 129 படி, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயம். தலைக்கவசம் இருவருக்கும் கட்டாயம் என்ற விதி பல ஆண்டுகளாக இருந்தாலும், பின் பற்றுபவர்கள் மிகக்குறைவாக உள்ளனர்.

நிறைய பேர் டூவீலரை ஓட்டிச்செல்லும் போது தலை கவசம் அணிவதில்லை. சிலர் ஹெல்மெட் அணிவதை சிக்கலாக நினைக்கிறார்கள். இன்னும் ஒருசிலர் ஒரு கிலோ மீட்டர், இரண்டு கிலோ மீட்டர் என குறுகிய தூரம் செல்லும் போது தலை கவசம் போடுவதில்லை.

நீண்டதூர பயணத்திற்கு தலைகவசம் போதும் என நினைக்கிறார்கள். தூரம் எவ்வளவு என்பதைவிட நம்முடைய பாதுகாப்பு முக்கியம் அல்லவா? சமீப காலங்களில் சென்னை நகரத்தில் அதிகரித்துவரும் இருசக்கரவாகன ஓட்டிகளின் இறப்புகளை கருத்தில் கொண்டு, தலைக்கவசம் ஓட்டுபவருக்கும் பின்னால் அமர்ந்து வருபவருக்கும் தலைக்கவசம் கட்டாயம் என மாநகர காவல்துறை கறாராக அறிவித்துள்ளது.

விதிகளை மீறுபவர்களுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்து சோதனையை தொடங்கி விட்டனர்.

கடந்த ஐந்து மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில், சென்னை நகரில் தலைக்கவசம் அணியாததால், 98 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 80 பேர் ஓட்டுநர்கள் மற்றும் 18 பேர் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் என தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக, தலைக்கவசத்தை வாகன ஓட்டியும் பின்னால் இருப்பவரும் அணிய வேண்டும் என்பதை தீவிரமாக செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உரிமமின்றி வாகனம் இயக்கக்கூடாது என்கிறது சட்டம். ஆனால் இதனை யார் மதிக்கிறார்கள்?. உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினால், நூற்றுக்கணக்கானோர் பிடிபட்டு அபராதம் செலுத்துகிறார்களே, அது ஏன்? நம்மில் பெரும்பாலானவர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்ற மறுக்கிறோம் அல்லது உதாசீனப்படுத்துகிறோம்.

காவலர்கள் கண்ணில் இருந்து எந்த வழியாக சென்றாலும் தப்ப முடியாது என்ற நிலை இருக்கும்போது எல்லாம் ஒழுங்காக நடக்கிறது.

அதாவது சட்டத்தை நாம் பின்பற்றத் தயாராக இல்லை, காவல் துறைக்கு பயந்து தான் தலை கவசம் போடுகிறோம். நமக்கான பாதுகாப்பிற்கு நாமே முக்கியத்துவம் தரவில்லை எனில், யார் நமக்காக உதவ முடியும்?

‘தலைக்கவசம் அணிவது ஒவ்வொருவரின் கடமை என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும். இந்தியாவில் அதிகளவில் சாலைவிபத்துகள் பதிவாகும் மாநிலங்களின் வரிசையில், தமிழகம் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. தினமும் இறப்புகள் பதிவாகின்றன என்பது நமக்கு கவலைதருகிறது.

வாகனம் ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகர காவல்துறையினர் நடவடிக்கையை கையிலெடுத்து இருக்கிறார்கள்.

இந்த நடவடிக்கை மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வரவேண்டும். அது மட்டும் போதாது, தொய்வின்றி செயல்படுத்தப்பட வேண்டும். தலைக்கவசம் இன்றி வாகனத்தை ஸ்டார்ட் செய்யக்கூட அச்சப்படும் அளவிற்கு சோதனைகள் நடத்தி அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

தலைக்கவசம் அணிவது இறப்பில் இருந்து தப்புவதற்கு வாகன ஓட்டிகளுக்கு பெரிய வாய்ப்பைத் தருகிறது. அந்த வாய்ப்பை ஒருபோதும் தவற விடாதீர்கள்… இல்லையெனில் என்ன நடக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

வாகனத்தை ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் தலைக் கவசம் அணிவதில் சமரசம் வேண்டாம். அது தான் நமக்கும் நம் குடும்பத்துக்கும் நல்லது!

படிக்க வேண்டும்

spot_img