Homeதலையங்கம்தரமான விமர்சனமே அரசியல் நாகரிகம்!

தரமான விமர்சனமே அரசியல் நாகரிகம்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம், சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டம், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவிக்காத விஷயம்… இப்படி எந்த விஷயம் கிடைத்தாலும் அது அற்பமானதாக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆளும் திமுகவை விமர்சிப்பதை தமிழக பாஜக தனது அன்றாட அஜென்டாவாக வைத்துள்ளதாகவே தெரிகிறது.

திமுக – அதிமுக என்ற தமிழகத்தின் இருதுருவ அரசியலை திமுக & பாஜக என மாற்றும் முயற்சியில் ஒரு உத்தியாகவே பாஜக இந்த விமர்சன பாணியை கடைபிடித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, சும்மா பெயரளவில் திமுகவை விமர்சித்து வந்த நிலையில், சில மாதங்களாக அக்கட்சியில் நிலவிவரும் உட்கட்சி பூசலை தீர்க்கவே ஓபிஎஸ், இபிஎஸ் அன்கோவுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

இதற்கு மத்தியில் அவர்கள் எங்கே ஆளுங்கட்சிக்கு எதிராக குரல் கொடுப்பது? உட்கட்சி பூசலால் எதிர்க்கட்சியாக முழுவீச்சில் அதிமுக செயல்பட முடியாத நிலையில் இருக்கும்போது, இதுதான் சமயம் என்று, ஒவ்வொரு பொது பிரச்சினையிலும் அண்ணாமலை திமுகவை விமர்சிக்காமல் விடுவதில்லை.

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்தில் ஆரம்பித்த கருத்து மோதல், முடிவுக்கு வந்துவிட்டதாக இருதரப்பினரும் கருதி வந்த நிலையில், மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே கட்சி நிர்வாகி ஒருவருடன் அண்ணாமலை பேசியதாக சில தினங்களுக்கு முன் ஆடியோ ஒன்று வெளியானது.

அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது என் குரல்தான்; ஆனால் அதனை திமுகவினர் முன்னும் பின்னும் எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் என்று கூலாக கூறியிருந்தார் அண்ணாமலை.

இதனால் கடுப்பான பிடிஆர், ராணுவ வீரரின் மரணத்தை வைத்தும் அரசியல் செய்யும் நீங்கள் தமிழகத்துக்கு மிகப்பெரிய சாபக்கேடு… உங்களின் பெயரைக் கூட சொல்ல விரும்பவில்லை எனக் கூறி, ஆடு வடிவிலான எமோஜியுடன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட, ஆக்ரோஷம் ஆகி கொந்தளித்துள்ளார் அண்ணாமலை. ‘நீங்கள் என் செருப்பின் தகுதிக்குக் கூட சமம் ஆக மாட்டீர்கள்’ என்று பிடிஆருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஆளும் கட்சியை விமர்சித்து அதன் மூலம் மாநிலத்தில் கட்சியை வளர்ப்பதைகூட ஒருவித அரசியலாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இருவரும் பொதுவெளியில் ஒருவரையொருவர் மாறி, மாறி கடுமையாக விமர்சித்துக் கொள்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதில் தரம் தாழ்ந்து விடக்கூடாது. இதனை இரு தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் நாகரீகம் பேணப்பட வேண்டும்.

இரு பிரதான கட்சிகளின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் இரு தலைவர்கள், இப்படி செருப்பை மையமாக கொண்டு, ஒருவரையொருவர் தரம்தாழ்த்தி திட்டிக்கொள்வதை கைவிட்டு , ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்பதே ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்.

படிக்க வேண்டும்

spot_img